ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டிடம்


ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டிடம்
x
தினத்தந்தி 17 Nov 2021 4:26 PM GMT (Updated: 17 Nov 2021 4:26 PM GMT)

திருவாரூரில் ரூ.2 கோடியே 38 லட்சத்தில் கட்டப்பட்ட ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டிடத்தை காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருவாரூர்:
திருவாரூரில் ரூ.2 கோடியே 38 லட்சத்தில் கட்டப்பட்ட ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டிடத்தை காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 
குத்துவிளக்கேற்றினார்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி மூலம் திருவாரூரில் ரூ.2 கோடிேய 38 லட்சத்து 9 ஆயிரம்  மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டிடத்தை திறந்து வைத்தார். திருவாரூரில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார். 
பின்னர் அவர் கூறியதாவது:-
11 அறைகள் கொண்ட வசதிகளுடன்
ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் 100 மாணவர்கள் தங்குவதற்கு வசதியுடன் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 11 அறைகள் கொண்ட வசதிகளுடன் மூன்று தளமாக கட்டப்பட்டுள்ளது. மேலும் தரை தளத்தில் காப்பாளர் அறை, சமையலறை, பொருள் வைக்கும் அறை, சமையல் எரிவாயு அறை, உணவருந்தும் அறை ஆகியவைகளும், முதல் தளத்தில் பொழுது போக்கு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளத்திலும் மாணவர்களுக்கு 4 குளியல் அறைகள், 4 கழிவறைகள் என மொத்தம் 12 குளியல் அறைகளும், 12 கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
சிமெண்டு சாலை 
மாணவர்களின் பாதுகாப்பிற்காக விடுதி வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, உயர்ந்த வண்ணப்பூச்சுடன் இறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் நுழைவு வாயிலில் இருந்து விடுதிக்கு சென்று வர வசதியாக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. விடுதி கட்டிடத்திற்கு மும்முனை மின் இணைப்பு, ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தனியே குளியல் அறை மற்றும் கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் விடுதியில் அமைந்துள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.
நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் பாலசந்திரன், அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் பிரகாஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story