ஆரோவில் அருகே திருமண மண்டபத்தில் மொய்ப்பணம் ரூ 1 லட்சம் 6 பவுன் நகை திருட்டு


ஆரோவில் அருகே திருமண மண்டபத்தில் மொய்ப்பணம் ரூ 1 லட்சம் 6 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 17 Nov 2021 4:29 PM GMT (Updated: 17 Nov 2021 4:29 PM GMT)

ஆரோவில் அருகே திருமண மண்டபத்தில் மொய்ப்பணம் ரூ 1 லட்சம் 6 பவுன் நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்


விழுப்புரம்

திருமண வரவேற்பு நிகழ்ச்சி

புதுச்சேரி மாநிலம் சேதராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 39). இவருடைய தம்பி மணிமாறன் என்பவருக்கு கடந்த 15-ந் தேதியன்று மயிலம் முருகன் கோவிலில் திருமணம் நடந்தது. அதன் பிறகு நேற்று முன்தினம் மாலை ஆரோவில்லை அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உறவினர்கள் கொடுத்த மொய்ப்பணம் ரூ.1 லட்சம் மற்றும் 6 பவுன் நகை ஆகியவற்றை மண்டபத்தில் உள்ள அறையில் வைத்துவிட்டு புகைப்படம் எடுக்கச்சென்றனர்.

நகை- பணம் திருட்டு

பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது நகை-பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், நண்பர்கள் மண்டபம் முழுவதும் தேடிப்பார்த்தும், கிடைக்கவில்லை. யாரோ மர்ம நபர்கள், அதனை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. அதில் இருந்த நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சமாகும். இது குறித்த புகாரின்பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம் இருந்த பையை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story