பள்ளிக்கரணையில் சதுப்பு நிலத்தை பத்திரப்பதிவு செய்து இருந்தால் மீட்கப்படும்: அமைச்சர் மெய்யநாதன்


பள்ளிக்கரணையில் சதுப்பு நிலத்தை பத்திரப்பதிவு செய்து இருந்தால் மீட்கப்படும்: அமைச்சர் மெய்யநாதன்
x
தினத்தந்தி 18 Nov 2021 10:02 AM GMT (Updated: 18 Nov 2021 10:02 AM GMT)

கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை யாராவது பத்திரப்புதிவு செய்து இருந்தால் அந்த நிலம் மீட்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

அமைச்சர் ஆய்வு

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் செய்யப்பட வேண்டிய பணிகள், அங்கு நடைபெறும் பராமரிப்பு பணிகள் குறித்து தமிழக வனம், சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார். சதுப்பு நிலத்தில் தற்போது நடைபெறும் பராமரிப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மழைநீர் சதுப்பு நிலத்துக்கு வரும் பகுதிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

அப்போது அவருடன் தென் சென்னை தொகுதி தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த ரமேஷ் மற்றும் சுற்றுச்சூழல், வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நிலங்கள் மீட்கப்படும்

பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிக்கு அருகில் உள்ள குப்பை கிடங்கை அகற்றி வனப்பகுதியாக மாற்றுவது முதல் பணியாக இருக்கிறது. அதற்காக குப்பைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஒரு காலத்தில் 7000 ஹெக்டேராக இருந்தது. தற்போது 640 ஹெக்டேராக குறைந்து உள்ளது. எனவே கடந்த 4, 5 ஆண்டுகளில் சதுப்பு நிலத்தை யாராவது பத்திரப்பதிவு செய்து இருந்தால் அந்த நிலம் மீட்கப்படும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மீட்கவேண்டும் என்பதுதான் அனைவரின் கருத்தாக உள்ளது.

இந்த சதுப்பு நிலத்துக்கு 6 இடங்கள் வழியாக நீர் வருகிறது. வெயில் காலங்களில் இந்த பகுதிகளில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு செய்ய வேண்டிய பணிகளை ஒட்டுமொத்தமாக செய்ய கருத்துகளை கேட்டு முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story