வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது


வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 30 Nov 2021 10:04 AM GMT (Updated: 2 Dec 2021 11:30 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சியில் ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க., சுயேச்சை கவுன்சிலர்கள் ஆதரவுடன் தி.மு.க.வை சேர்ந்தவர் ஒன்றிய குழு தலைவராக வெற்றி பெற்றார்.

வாலாஜாபாத்,

வாலாஜாபாத் ஊராட்சியில் ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர் தேர்தல் வாலாஜாபாத் ஊராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஊரக உள்ளாட்சி பதிவிகளுக்கான ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் தி.மு.க.வை சேர்ந்த 15 பேரும், காங்கிரசை சேர்ந்த ஒருவரும் வெற்றி பெற்று இருந்தனர். மேலும் அ.தி.மு.க. சார்பில் 2 பேரும், பா.ம.க. சார்பில் ஒருவரும், சுயேச்சைகளாக 2 பேரும் ஒன்றிய கவுன்சிலர்களாக வெற்றி பெற்று இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 22-ந்தேதி ஒன்றிய குழு தலைவருக்கான தேர்தல் நடைபெற இருந்த நிலையில் தி.மு.க.வை சேர்ந்த தேவேந்திரன், சஞ்சய் காந்தி ஆகிய 2 பேர் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். தி.மு.க.வை சேர்ந்த இருதரப்பினரிடையே போட்டி ஏற்பட்டதால் தேர்தல் நடைபெறாமல் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் மீண்டும் தேவேந்திரன், சஞ்சய்காந்தி இடையே போட்டி ஏற்பட்டது. இதை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர், துணை கலெக்டர் ரவிச்சந்திரன் இரு தரப்பினரிடையேயும் வேட்பு மனுக்களை பெற்று தேர்தலை நடத்தினார். ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் போட்டியிட்ட தேவேந்திரன் வேட்பு மனுவை சுயேச்சை ஒன்றிய கவுன்சிலர் பிரேமா ரஞ்சித்குமார் முன்மொழிய, தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் உலகநாதன் வழிமொழிந்தார்.

இதை தொடர்ந்து அ.தி.மு.க., பா.ம.க., சுயேச்சை ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்கள் ஆதரவுடன் 17 வாக்குகள் பெற்று ஒன்றிய குழு தலைவராக தேவேந்திரன் தேர்ந்து எடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சஞ்சய் காந்தி 4 வாக்குகள் மட்டுமே பெற்றார். பின்னர் நடைபெற்ற வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கான ஒன்றிய குழு துணைத் தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய செயலாளர் பி.சேகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

ஒன்றிய குழு தலைவர் தேர்தலை ஒட்டி வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Next Story