பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் புகார் பெட்டி


பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 Dec 2021 4:18 PM GMT (Updated: 2 Dec 2021 4:18 PM GMT)

பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

திண்டுக்கல்

ஆலோசனை கூட்டம் 

பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமைகள் தடுப்பு தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலைநாடார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார்.

 முதன்மை கல்வி அலுவலர் கருப்புசாமி முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் பாலியல் குற்றங்களை தடுப்பது பற்றிய விழிப்புணர்வு ஸ்டிக்கர் வெளியிடப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்க வேண்டும். 

அதில் மாணவர்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் குற்றங்களை தடுப்பது, இளவயது திருமணங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாணவர்களுக்கு நம்பிக்கை

பாலியல் குற்றங்கள், இளவயது திருமணம் குறித்து மாணவர்கள் புகார் அளித்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதுபோன்ற புகார்களை அளிக்க மாணவ-மாணவிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். 

பள்ளியில் காலை வழிபாட்டு நேரத்தில் தினமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை வழக்கமாக கடைபிடிக்க வேண்டும். மேலும் பாலியல் குற்றங்களை தடுப்பது பற்றிய விழிப்புணர்வு நோட்டீசை வகுப்பறைகளில் ஒட்ட வேண்டும்.

இதேபோல் பள்ளி வாகனத்தில் ஒரு மாணவி வந்தாலும், ஒரு பெண் அலுவலரை நியமிக்க வேண்டும். பள்ளி அருகே புகையிலை பொருட்கள், கஞ்சா போன்றவை விற்றால் போலீசில் புகார் அளிக்க வேண்டும். பாலியல் குற்றங்களை தடுக்க ஆசிரியர்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 

இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லாவண்யா, மாவட்ட கல்வி அலுவலர்கள் வசந்தா, கீதா, எம்.எஸ்.பி. சோலைநாடார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பழனி
பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கல்வித்துறை மற்றும் போலீஸ்துறை சார்பில் பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்புசாமி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் துணை சூப்பிரண்டு சத்தியராஜ் பேசுகையில், பெண் குழந்தைகள் பள்ளிகளில் தான் அதிக நேரம் செலவிடுகின்றனர். எனவே அவர்களை கண்காணிப்பது அவசியம் ஆகும். பாலியல் தொல்லை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் பழனி பகுதியில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story