சேலம் மாவட்டத்தில் 2 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில் 2 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 Dec 2021 10:14 PM GMT (Updated: 3 Dec 2021 10:14 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 2 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம், 
41 பேருக்கு தொற்று
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், நேற்று மேலும் 41 பேருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது.
3 பேர் பலி
இதனிடையே, சேலம் மாவட்டத்தை சேர்ந்த 64 வயது, 70 வயது மூதாட்டி மற்றும் 60 வயதான முதியவர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.  ஆனால் நேற்று இவர்கள் 3 பேரும் ஒரேநாளில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,709 ஆக அதிகரித்துள்ளது.
2 மாணவிகளுக்கு கொரோனா
இந்தநிலையில், சேலத்தில் பள்ளி மாணவிகள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும், அயோத்தியாப்பட்டணம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது.
இதையடுத்து அவர்கள் இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தபோது, அவர்களுக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட மாணவிகள் இருந்த 2 பள்ளிகளின் வகுப்பறைகளில் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது.
அதேசமயம், கொரோனா பாதிப்புக்கு ஆளான அந்த 2 மாணவிகளுடன் தொடர்பில் இருந்த சக மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story