சென்னை குடிநீர் ஏரிகளில் உபரிநீர் திறப்பு குறைப்பு


சென்னை குடிநீர் ஏரிகளில் உபரிநீர் திறப்பு குறைப்பு
x
தினத்தந்தி 6 Dec 2021 9:39 AM GMT (Updated: 6 Dec 2021 9:39 AM GMT)

மழை இல்லாததால் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

5 ஏரிகளில் நீர் இருப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் 11.757 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் 10.155 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

கடந்த 2 வாரமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ததால் இந்த ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்து, ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் பாதுகாப்பு கருதி அனைத்து ஏரிகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

உபரிநீர் திறப்பு குறைப்பு

பூண்டி ஏரியில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 38 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மழை இல்லாததால் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து குடிநீர் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பும் குறைக்கப்பட்டு உள்ளது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி. ஆகும். நேற்று ஏரியில் 2.902 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 3,300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஏரியில் இருந்து வினாடிக்கு 2,600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.


Next Story