உடன்குடி வாரச்சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு


உடன்குடி வாரச்சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு
x
தினத்தந்தி 6 Dec 2021 10:11 AM GMT (Updated: 6 Dec 2021 10:11 AM GMT)

உடன்குடி வாரச்சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு

உடன்குடி:
உடன்குடி மெயின் பஜார் 4 ரோடு சந்திப்பு பகுதியில் திங்கட்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். அங்கு பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டு காய்கறிகள், பழங்கள், மளிகைப்பொருட்கள் போன்றவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெறும்.
நேற்று நடந்த வாரச்சந்தையின்போது காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதன்படி ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.140-க்கும், நீல நிற கத்தரிக்காய் ரூ.120-க்கும், அவரைக்காய், வெண்டைக்காய், பீன்ஸ் ஆகியவை ரூ.120-க்கும் விற்பனையானது.
மேலும் தக்காளி, மிளகாய், கேரட், சிறுகிழங்கு ஆகியவை ரூ.100-க்கும், பீட்ரூட், முட்டைகோஸ் ஆகியவை ரூ.60-க்கும் பல்லாரி, உருளைக்கிழங்கு ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘மழைக்காலத்தில் காய்கறிகளின் வரத்து குறைந்ததாலும், பல்வேறு விழாக்கள் நடைபெறுவதாலும், கார்த்திகை மாதத்தில் அய்யப்ப பக்தர்கள் விரதம் இருப்பதாலும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது’ என்று தெரிவித்தனர்.

Next Story