நந்திவரம் பஸ் நிலையத்தில் அரசு பஸ்களை சிறைபிடித்து பயணிகள் போராட்டம்


நந்திவரம் பஸ் நிலையத்தில் அரசு பஸ்களை சிறைபிடித்து பயணிகள் போராட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2021 10:29 AM GMT (Updated: 7 Dec 2021 10:29 AM GMT)

நந்திவரம் பஸ் நிலையத்தில் இருந்து கொட்டமேடு கிராமத்திற்கு பஸ் உரிய நேரத்தில் வராததால் பஸ்களை சிறைபிடித்து பயணிகள் போராட்டம் நடத்தினர்.

பஸ்கள் சிறைபிடிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் பஸ் நிலையத்தில் கொட்டமேடு கிராமத்திற்கு செல்வதற்காக முதியோர்கள், பெண்கள், பள்ளி மாணவர்கள் உள்பட ஏராளமான பயணிகள் நேற்று மாலை 6 மணியில் இருந்து அரசு பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

இந்தநிலையில், வழக்கமாக மாலை 6.30 மணி அளவில் வரவேண்டிய பஸ் 7 மணி ஆகியும் வராத காரணத்தினால் ஆத்திரமடைந்த பயணிகள் நந்திவரம் பஸ் நிலையத்திலிருந்து சென்னை நோக்கி பல்வேறு ஊர்களுக்கு செல்லும் மாநகர போக்குவரத்து பஸ்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதனையடுத்து பஸ் நிலையத்தில் இருந்த போக்குவரத்து கழக அதிகாரி விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தினந்தோறும் கொட்டமேடு கிராமத்திற்கு செல்லும் நாங்கள் வழக்கமாக வரும் பஸ்சுக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

சரியான நேரத்திற்கு பஸ்களை இயக்குவது கிடையாது. எனவே எங்களுக்கு உரிய நேரத்தில் பஸ் விடுவதற்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் போக்குவரத்து துறையை சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.

பயணிகள் அவதி

இதற்கு அந்த அதிகாரி, மேல் அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதேபோல கூடுவாஞ்சேரி போலீசாரும் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

பயணிகள் போராட்டத்தின் காரணமாக நந்திவரம் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நந்திவரம் பஸ் நிலையத்தில் இருந்து மாநகர பஸ் மூலம் சென்னைக்கு செல்ல வேண்டிய பயணிகளும் அவதிப்பட்டனர்.


Next Story