அரசு பள்ளி மாணவர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு


அரசு பள்ளி மாணவர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Dec 2021 4:27 PM GMT (Updated: 13 Dec 2021 4:27 PM GMT)

அரசு பள்ளி மாணவர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தை பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு பள்ளி மாணவர்கள்

கிணத்துக்கடவில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கோவை- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கிணத்துக்கடவு, மணிகண்ட புரம், கிருஷ்ணசாமி புரம், நல்லட்டிபாளையம், சிங்கையன் புதூர், தாமரைக்குளம் உள்ளிட்ட பல கிராம பகுதிகளில் இருந்து சுமார் 1,300-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். 
பள்ளிக்கூடம் முடிந்து இந்த மாணவர்கள் தங்களது ஊருக்கு செல்ல பஸ் ஏறுவதற்காக கிணத்துக்கடவு பஸ் நிலையத்திற்கு வருவார்கள். அங்கு மாணவர்கள் நிற்க்கும்போது அடிக்கடி மாணவர்களுக்குள் கோஷ்டிப்பூசல் ஏற்பட்டு தகராறு நடந்து வருகிறது. இது குறித்து போலீசார் பலமுறை மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியும் மாணவர்கள் கண்டுகொள்வதில்லை. 

மோதல்

இந்தநிலையில் நேற்று காலை கிணத்துகடவு தினசரி காய்கறி சந்தை வளாக பகுதியில் 3 மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் பலமாக தாக்கி கொண்டனர். 3 மாணவர்களுக்கும் ஆதரவாக மேலும் சில மாணவர்கள் அடிதடியில் ஈடுபட்டனர். இதனால் காய்கறி சந்தை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. இதனை பார்த்த அங்குள்ள பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கும், கிணத்துக்கடவு அரசு மேல்நிலை பள்ளிக்கும் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து கிணத்துக்கடவு போலீசார், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்ட 12-ம் வகுப்பில் அறிவியல் மற்றும், கலை பிரிவில் படிக்கும் மாணவர்கள் 12 பேரை கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். பின்னர் அங்கு கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கனகராஜ் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாணவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். 

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் 

மாணவர்கள் நலன் கருதி பள்ளி நிர்வாகம் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், தகராறில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு ஆசிரியர்கள் விசாரணை நடத்தி அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசிரியர்கள் கூறினார்கள். 
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கிணத்துக்கடவு பஸ் நிலையத்தில் காலை, மாலை நேரங்களில் அடிக்கடி மாணவர்கள் தகராறில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் பஸ் ஏற நிற்கும் பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டு பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும், மாணவர்கள் மீது காவல் துறையும், பள்ளி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story