ரோட்டில் கிடந்த துப்பாக்கியை போலீசில் ஒப்படைத்த மூதாட்டி


ரோட்டில் கிடந்த துப்பாக்கியை போலீசில் ஒப்படைத்த மூதாட்டி
x
தினத்தந்தி 13 Dec 2021 4:27 PM GMT (Updated: 13 Dec 2021 4:27 PM GMT)

ரோட்டில் கிடந்த துப்பாக்கியை போலீசில் ஒப்படைத்த மூதாட்டி

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் ரோட்டில் கிடந்த துப்பாக்கியை மூதாட்டி ஒருவர் போலீசில் ஒப்படைத்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரோட்டில் கிடந்த துப்பாக்கி

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒட்டர்பாளையத்தை சேர்ந்தவர் கோபாலன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 72). இவரது பேத்தியான விஜயா என்பவருக்கு குழந்தை பிறந்து உள்ளது. குழந்தையை பார்ப்பதற்கு பொள்ளாச்சியில் உள்ள திருநீலகண்டர் வீதிக்கு விஜயலட்சுமி வந்தார். பின்னர் கோவை ரோட்டில் உள்ள ஒரு உணவகத்துக்கு சாப்பாடு வாங்குவதற்கு நேற்று முன்தினம் சென்றார். அப்போது காந்தி சிலை அருகே தியேட்டர் முன் ஒரு கருப்பு நிற கோட்டு கிடந்தது. 

இதையடுத்து அதை அவர் எடுத்து பார்த்தார். அப்போது அதில் ஒரு துப்பாக்கி, கையுறை இருப்பதை பார்த்து விஜயலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பேரன் விஜய்க்கு தகவல் கொடுத்தார். அவர் துப்பாக்கியை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து விஜயலட்சுமி நகர கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு சென்று துப்பாக்கியை ஒப்படைத்தார். துப்பாக்கியை பெற்றுக் கொண்ட போலீசார் இதுகுறித்து மூதாட்டி மற்றும் அவரது பேரன் விஜயிடம் விசாரணை நடத்தினர். 

போலீசார் விசாரணை

விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான பதிலை கூறியதால் போலீசார் சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் ரோட்டில் கேட்பாரற்று கிடந்ததாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் துப்பாக்கி கிடந்த இடம் மகாலிங்கபுரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது. 
இதையடுத்து இந்த வழக்கு மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. கையுறையுடன் துப்பாக்கி கிடந்ததால் கூலிப்படையை சேர்ந்தவர்கள் விட்டு சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

பொள்ளாச்சியில் நடுரோட்டில் துப்பாக்கி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், மூதாடடி விஜயலட்சுமி ரோட்டில் கிடந்ததாக ஒப்படைத்த துப்பாக்கி நாட்டு ரகத்தை சேர்ந்தது. இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்கு பிறகு துப்பாக்கி  கோர்ட்டில் ஒப்படைக்கப்படும். மேலும் ரோட்டில் யாராவது போட்டு விட்டு சென்றார்களா? என்று அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றோம் என்றனர்.

Next Story