நகை வாங்குவதுபோல் நடித்து தங்க கம்மலை திருடிய அக்கா-தங்கை கைது


நகை வாங்குவதுபோல் நடித்து தங்க கம்மலை திருடிய அக்கா-தங்கை கைது
x
தினத்தந்தி 17 Dec 2021 9:14 AM GMT (Updated: 17 Dec 2021 9:14 AM GMT)

நகை வாங்குவதுபோல் நடித்து தங்க கம்மலை திருடிய அக்கா-தங்கையை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை திருவல்லிக்கேணி அவ்வை சண்முகம் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் தாஸ் (வயது 36). இவர், நொச்சிக்குப்பம், பைண்டி அம்மன் கோவில் தெருவில் நகை கடையும், அடகு கடையும் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 2-ந்தேதி 2 பெண்கள் நகை வாங்குவதுபோல் வந்தனர். அவர்கள் வெகுநேரம் நகைகளை பார்த்துவிட்டு, பின்னர் தங்களுக்கு நகைகளின் டிசைன் பிடிக்கவில்லை என்று கூறி வெளியே சென்றுவிட்டனர்.

அசோக் தாஸ், வியாபாரம் முடிந்து அன்று இரவு நகைகளை சரிபார்த்தபோது, 6 கிராம் எடையுள்ள தங்க கம்மல் மாயமாகி இருப்பது தெரிந்தது. கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சோதனை செய்தபோது, நகை வாங்குவதுபோல் கடைக்கு வந்த 2 பெண்கள்தான் தங்க கம்மலை திருடிச்சென்றது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அசோக்தாஸ், இது குறித்து மெரினா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்க கம்மலை திருடிய ராமாபுரம் நெசப்பாக்கத்தைச் சேர்ந்த தனலட்சுமி (50), அவருடைய தங்கை கோவிந்தம்மாள் (45) மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த தனலட்சுமியின் மகன் பாபு (35) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story