ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் அதிசய நாய்


ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் அதிசய நாய்
x
தினத்தந்தி 22 Dec 2021 10:31 AM GMT (Updated: 22 Dec 2021 10:31 AM GMT)

கோவில்பட்டி அருகே ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாயை சுற்றுவட்டார மக்கள் அதிசயமாக பார்த்து செல்கின்றனர்

கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கணேஷ் நகரைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி, கட்டிட ஒப்பந்ததாரர். தனது வீட்டில் கிட்டியம்மாள் என்ற பெண் நாய் ஒன்றை அவர் பாசத்துடன் வளர்த்து வருகிறார். குடும்ப உறுப்பினராகவே வளர்ந்து வரும் அந்த நாய் போட்ட 6 குட்டிகளை அவர் தனது நண்பர்களுக்கு கொடுத்து விட்டார்.
இதற்கிடையே, தென்காசி அருகே உள்ள மேலப்பாவூரில் உள்ள பெருமாள்சாமியின் மூத்த மகள் இலக்கியா வீட்டில் உள்ள ஆடு ஒன்று, 4 குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு குட்டியை இலக்கியா, தனது தந்தை பெருமாள்சாமியிடம் கொடுத்துள்ளார். கருப்பாயி என்ற பெயருடன் அந்த ஆட்டுக்குட்டி அவரது வீட்டில் வளர்ந்து வருகிறது.
இந்நிலையில், அந்த ஆட்டுக்குட்டி வீட்டிற்கு வந்தது முதல், நாயும் பாசத்துடன் பழகியுள்ளது. ஆட்டுக்குட்டிக்கு பசி எடுக்கும் போதெல்லாம், நாய் பாசத்துடன் பால் கொடுத்து வருவதைப் பார்த்த பெருமாள்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆச்சரியப்பட்டனர். இது சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியதால் அந்த காட்சியை அந்த பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து பெருமாள்சாமி கூறுகையில், ‘நாய் பால் கொடுப்பதால் ஆட்டுக்குட்டிக்கு வேறு எதுவும் பிரச்சினை வருமா? என்று அச்சப்பட்டோம். இதுகுறித்து கால்நடை மருத்துவரிடம் கேட்டபோது, பிரச்சினை எதுவும் இருக்காது என்று தெரிவித்ததாக, கூறினார்.

Next Story