‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 24 Dec 2021 9:14 AM GMT (Updated: 24 Dec 2021 9:14 AM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மினிபஸ் சேவை தொடங்கியது



திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட மேல் அயனம்பாக்கம் வழியாக திருவேற்காட்டில் இருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு மினிபஸ் விடக்கோரி பொதுமக்கள் விடுத்த கோரிக்கை ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இந்த நிலையில் திருவேற்காடு-அம்பத்தூர் தொழிற்பேட்டை (மேல் அயனம்பாக்கம் வழியாக) இடையே எஸ்.9 என்ற மினிபஸ் இயக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக போக்குவரத்து துறைக்கும், ‘தினத்தந்தி' பத்திரிகைக்கும் பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்திருக்கிறார்கள்.

எரியாத தெரு விளக்குகள்

சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் 2-வது குறுக்கு தெருவில் உள்ள மின்விளக்கு நீண்ட நாட்களாக எரியாமலேயே இருக்கிறது. எனவே மாலை நேரம் கடந்ததுமே இப்பகுதி இருளின் பிடியில் மாட்டிக்கொள்கிறது. மக்கள் பெரும் சிரமம் அடைகிறார்கள். இதேபோல கொடுங்கையூர் சேலவாயல் ஸ்ரீதுர்கை அவென்யூ 2-வது தெருவிலும் உள்ள மின்விளக்கு எரியாமலேயே இருக்கிறது. நடவடிக்கை எடுப்பார்களா?

- சுந்தரமூர்த்தி, திருவொற்றியூர்.

பள்ளி கழிவறை படுமோசம்

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். பள்ளி கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் மேல் தளத்தில் உள்ள கழிவறைகள் மோசமாக உள்ளது. பயன்படுத்த முடியாதபடி அலங்கோலமாக காட்சி தருகிறது. சுகாதாரமற்று காணப்படும் இந்த கழிவறைகள் பல்வேறு நோய்கள் பரவுவதற்கு வடிகாலாகவும் அமைந்து வருகிறது. இப்பள்ளி கழிவறைகள் சீரமைக்கப்படுமா?. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.

- பொதுமக்கள்.

டிரான்ஸ்பார்மர் தூண்கள் உடனடி சீரமைப்பு



திருவள்ளூர் மாவட்டம் அரண்வாயல் கிராமம் விவேகானந்தர் சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து இருப்பது தொடர்பான செய்தி ‘தினந்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதனை தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் உடனடி கள ஆய்வில் ஈடுபட்டு பழுதடைந்த டிரான்ஸ்பார்மர் தூண்களுக்கு மாற்றாக புதிய தூண்களை நட்டனர். இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ஆபத்தான மின் இணைப்பு பெட்டி

சென்னை பாலவாக்கம் மஞ்சம்மை தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டி கதவு உடைந்தும், மின் வயர்கள் வெளியே நீட்டிக் கொண்டும் மிகவும் ஆபத்தான முறையில் காட்சியளிக்கிறது. இப்பகுதியில் ஏராளமான சிறுவர்-சிறுமிகள் விளையாடுகிறார்கள். எனவே தேவையற்ற அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் இந்த மின் இணைப்பு பெட்டியை சீரமைக்க வேண்டும்.

- பொதுமக்கள், பாலவாக்கம்.

ரேஷன் கடையில் பாமாயில் இல்லையா...

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சி அத்திமாஞ்சேரிபேட்டையில் உள்ள ரேஷன் கடையில் (எண்-1) ரேஷன்கார்டுதாரர்களுக்கு பாமாயில் முறையாக வழங்கப்படுவது கிடையாது. பாதிபேருக்கு மட்டுமே பாமாயில் தருகிறார்கள். இதுகுறித்து கேட்டால் அவ்வளவுதான் சரக்கு வந்திருக்கிறது என்று ஊழியர்கள் அலட்சியமாக பதில் அளிக்கிறார்கள். அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பாமாயில் வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- பொதுமக்கள், அத்திமாஞ்சேரிப்பேட்டை.

கழிவுநீர் பிரச்சினை தீருவது எப்போது?



சென்னை விருகம்பாக்கம் பூபதி தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் அடிக்கடி வெளியேறி வருகிறது. கடந்த 6 மாதங்களாகவே இந்த பிரச்சினை நிலவுகிறது. இதனால் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. கொசுக்கள் பெருகி நோய் பரவும் அபாயமும் நிலவி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் என்ன செய்வது? என்று தெரியவில்லை.

- சமூக ஆர்வலர்.

சாலையில் ஆபத்தான பள்ளங்கள்

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் 3 கி.மீ. தூரத்துக்கு பள்ளங்கள் உள்ளன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழ நேரிடும் அபாயம் இருக்கிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதியும், தேவையற்ற விபத்துகளை தடுக்கவும் இச்சாலை உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும்.

- காசிராஜன் மாரியப்பன், ஒரகடம்.

பன்றிகள் தொல்லை

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு எரிகரை சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதால் சாலைகள் குறுகி போயுள்ளது. அவசரகால வாகனங்கள் கூட வரமுடியாது. மேலும் இப்பகுதிகளில் பன்றிகளின் நடமாட்டமும் அதிகமாக இருக்கிறது. இதனால் குடியிருப்போர் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

- சமூக ஆர்வலர்கள்.

வேகத்தடைகள் அமைக்கப்படுமா?

சென்னை சாஸ்திரிநகர் நேரு பூங்கா பி.எச். சாலையில் உள்ள 1 முதல் 11 தெருக்களிலும் ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும். இந்த தெருக்களில் சிலர் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணிக்கிறார்கள். இதனால் அப்பகுதி வாசிகள் அச்சமடைகிறார்கள். வேகத்தடைகள் அமைக்கப்படும் பட்சத்தில் வாகனங்கள் மெதுவாகவே செல்ல நேரிடும். தேவையற்ற விபத்துகளும் தவிர்க்கப்படும்.

- சமூக ஆர்வலர்கள்.

பழுதடைந்த மின்கம்பம்



திருவள்ளூர் மாவட்டம் பள்ளிபட்டு வட்டம் பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளம்தெருவில் (கிழக்கு) உள்ள மின்கம்பம் பழுதடைந்து இருக்கிறது. சிமெண்ட் பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடி கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை கையாள வேண்டும்.

- பொதுமக்கள், நல்ல தண்ணீர்குளம் தெரு.

Next Story