திருத்தணி அருகே ரூ.70 லட்சம் செம்மரக்கட்டைகள் சிக்கியது - 3 பேர் கைது


திருத்தணி அருகே ரூ.70 லட்சம் செம்மரக்கட்டைகள் சிக்கியது - 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 Dec 2021 9:48 AM GMT (Updated: 26 Dec 2021 9:48 AM GMT)

திருத்தணி அருகே ரூ.70 லட்சம் செம்மரக்கட்டைகள் சிக்கியது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருத்தணி,

திருத்தணி அருகே மாம்பாக்கம் என்ற இடத்தில் நேற்று அதிகாலை சப்- இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சரக்கு ஆட்டோவில் செம்மரம் கடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர்.

அதில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் பொருட்களுக்கு கீழே, 23 முதல்தர செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

சரக்கு ஆட்டோவை தொடர்ந்து பாதுகாப்புக்காக ஒருவர் சொகுசு காரிலும், ஒருவர் மோட்டார் சைக்கிளிலும் வந்தார்கள். விசாரணையில் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா ஜானக புரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 48), பரணி (35) மற்றும் வளர்புரம் பகுதியை சேர்ந்த அஜித் (23) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டை, சொகுசு கார், சரக்கு ஆட்டோ, ஒரு மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டது. வனத்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story