‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 27 Dec 2021 9:55 AM GMT (Updated: 27 Dec 2021 9:55 AM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:

ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா?

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் புவனேஸ்வரி தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் சாயும் நிலையில் மோசமானதாக இருக்கிறது. இதுகுறித்து பலமுறை மின்வாரியத்திடம் புகார் அளித்துள்ளோம். இப்பகுதியில் பள்ளி குழந்தைகள் அதிகம் நடமாடுகிறார்கள். மின்கம்பம் இருக்கும் பகுதி அருகே நடமாடவே பயமாக இருக்கிறேன். மக்கள் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

- ச.அரிகிருஷ்ணன். மடிப்பாக்கம். 



பழுதடைந்த மின்கம்பம்

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை 190-வது வார்டில் உள்ள பாரதிதாசன் முதல் குறுக்குத்தெருவில் உள்ள மின்கம்பம் 6 மாதங்களாக பழுதடைந்து இருக்கிறது. சிமெண்ட் பூச்சு பெயர்ந்து மோசமாக இருக்கிறது. 

- கமலகண்ணன், பள்ளிக்கரணை. 

மின் மோட்டார் ரூம் சீரமைக்கப்படுமா?

சென்னை நீலாங்கரை முதல் மெயின் ரோடு கசுரா கார்டன் பகுதியில் உள்ள மெட்ரோ குடிநீர் இறைப்பதற்காக மின் மோட்டார் ரூம் உள்ளது. இந்த அறை இடிந்து உடைந்து ஒரு வருட காலமாகவே பராமரிப்பின்றி இருக்கிறது. அதில் உள்ள மின் மோட்டார் சுவிட்ச் போர்டும் ஆபத்தான வகையில் பராமரிப்பின்றி இருக்கிறது. 

- சமூக ஆர்வலர்கள். 



மினி பஸ் சேவை இயக்கப்படுமா?

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சானடோரியம் துர்கா நகரில் இருந்து எஸ்-94 என்ற மினி பஸ் திருமுடிவாக்கம் வரை இயக்கப்பட்டு வந்தது. சில காரணங்களுக்காக அந்த பஸ் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த மினி பஸ் சேவை மீண்டும் இயக்கப்பட்டால் மக்களுக்கு அது பயனுள்ள நடவடிக்கையாக இருக்கும்.

வி.தேவநாதன், கல்லூரி உதவி பேராசிரியர். 

மாடுகள் தொல்லையால் அவதி

சென்னை சூளைமேடு கில்நகர் 2-வது தெருவில் மாடுகள் தொல்லை மிகுதியாகவே இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், அப்பகுதிவாசிகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மாடுகள் தெருவில் சுற்றி திரிகின்றன. வீடுகள் முன்பாகவும் படுத்துவிடுகின்றன. எனவே மாநகராட்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- சுபாஷ், கில்நகர்.

பாதாள சாக்கடை திட்டம் நிறைவேறுமா?

ஆவடி மாநகராட்சியில் உள்ள அந்தோணி நகர் 2-வது குறுக்கு தெருவில் (அண்ணனூர் அருகில்) பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்குவது என்பது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. எனவே தனியார் லாரிகள் முலம் அதிக கட்டணம் கொடுத்து இக்கழிவுநீரை அகற்றும் நிலையில் பொதுமக்கள் இருந்து வருகிறார்கள். இத்தொல்லையில் இருந்து மக்களை காத்திட பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

- சமூக ஆர்வலர்கள். 



பழுதான மின் விளக்குகள்

சென்னை பல்லாவரம் ரெயில் நிலையம் அருகேயுள்ள ரெயில்வே பாலத்தில் உள்ள மின் விளக்குகள் பெருமழை பெய்த காலத்தின்போது பழுதானது. இந்த மின்விளக்குகள் இன்னமும் எரியாத நிலையில் காட்சி பொருளாகவே இருந்து வருகிறது. இதனால் அடிக்கடி அப்பகுதியில் விபத்துகள் நேரிடுகின்றன. 

- சுப்பிரமணி, ஜமீன் பல்லாவரம்.

குப்பை தொட்டிகள் வைக்கப்படுமா?

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியம் விளாங்காடுபாக்கம் கிராமத்தில் நியூ ஸ்டார் சிட்டி குடியிருப்பு பகுதிகளில் குப்பை தொட்டிகளே கிடையாது. இதனால் அப்பகுதி மக்கள் குப்பைகளை பிளாஸ்டிக் பைகளில் அள்ளிச்சென்று ஊருக்குள் உள்ள குப்பை தொட்டியில் போட்டு வருகிறார்கள். இந்த சிரமத்தை போக்கும் வகையில் எங்கள் பகுதியில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட வேண்டும். அதேவேளை மின்விளக்குகளும் எரியாத நிலையில் உள்ளது. இதற்கும் தகுந்த நடவடிக்கை வேண்டும்.

- தங்கராஜ், விளாங்காடுபாக்கம்.

அபாயகரமான பள்ளம்

திருவள்ளூர் மாவட்டம் புழல் காவாங்கரை - கிரானைட்லைன் இணைப்பு சாலையில் உள்ள பாலத்தில் கடந்த பெருமழையின் போது திடீர் பள்ளம் ஏற்பட்டது. இப்போது வரை அந்த பள்ளம் அப்படியே அபாயகரமான நிலையிலேயே காட்சி தருகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. 

- ஜெ.சதீஷ் குமார், காவாங்கரை. 



கம்பம் இருக்கு... கரண்ட் இல்லையே...

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஞாயிறு ஊராட்சிக்குட்பட்ட புதுகுப்பம் கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மின்கம்பங்கள் நடப்பட்டன. ஆனால் மின் இணைப்பு தரப்படவில்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். மின் இணைப்பு இல்லாததால் விவசாய தேவைகளுக்காக நீர் இறைக்கவும் முடியவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. விவசாயிகளின் சிரமத்தை போக்கும் வகையில் காட்சி பொருளாக இருக்கும் இந்த கம்பங்களில் மின் இணைப்பு தரப்பட வேண்டும். 

- லோகேஸ்வரராவ், புதுகுப்பம். 




Next Story