கோத்தகிரியில் சாலைகளில் கொட்டப்பட்டு கிடக்கும் கட்டுமான பொருட்களால் போக்குவரத்துக்கு இடையூறு


கோத்தகிரியில் சாலைகளில் கொட்டப்பட்டு கிடக்கும் கட்டுமான பொருட்களால் போக்குவரத்துக்கு இடையூறு
x
தினத்தந்தி 27 Dec 2021 10:21 AM GMT (Updated: 27 Dec 2021 10:21 AM GMT)

கோத்தகிரியில் சாலைகளில் கொட்டப்பட்டு கிடக்கும் கட்டுமான பொருட்களால் போக்குவரத்துக்கு இடையூறு

கோத்தகிரி

கோத்தகிரியில் பிரதான சாலையில் கட்டுமான பொருட்கள் கொட்டி வைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதால், அந்த சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்அவதியடைந்து வருகிறார்கள்.

கட்டுமான பொருட்கள்

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த சில நாட்களாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட கட்டுமான பொருட்கள் சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் அரசு கருவூலம், தாசில்தார் அலுவலகம், கோர்ட்டு, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், போக்குவரத்து காவல் நிலையம், மார்க்கெட் உள்ளிட்டவை அமைந்துள்ளன. 
எனவே இந்த சாலை பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து நிறைந்த சாலையாக உள்ளது. இந்தநிலையில் இந்த சாலையோரத்தில் அமைந்துள்ள கூட்டுறவு வங்கியில் கட்டுமான பணிகள் நடைபெறுவதையொட்டி, சாலையில் கட்டுமானப் பொருட்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. 

விரைவுபடுத்த வேண்டும்

இதனால் இந்த சாலை வழியாக வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோர் சிரமத்துடன் சென்று வர வேண்டி உள்ளதுடன், போக்குவரத்திற்கு இடையூறும் ஏற்பட்டு வருகிறது. மேலும் வாகன விபத்துகள் அரங்கேறுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். 
மேலும் செங்குத்தான சாலையில் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக சாலையில் கொட்டி வைக்கபட்டுள்ள கட்டுமானப் பொருட்களை அங்கிருந்து அகற்ற வைக்க, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கட்டுமான பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story