கூடலூர் பகுதியில் கடும் பனிப்பொழிவு


கூடலூர் பகுதியில் கடும் பனிப்பொழிவு
x
தினத்தந்தி 27 Dec 2021 10:25 AM GMT (Updated: 27 Dec 2021 10:25 AM GMT)

கூடலூர் பகுதியில் கடும் பனிப்பொழிவு

கூடலூர் 

கூடலூர் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக தேயிலை செடிகளுக்கு ‘ஸ்பிரிங்ளர்’ மூலம் தண்ணீர் தெளிக்கும் பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

கடும் பனிப்பொழிவு

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியில் ஜூன் தொடங்கி தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்வது வழக்கம். தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதல் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்கிறது. சுமார் 6 மாதங்கள் தொடர்ந்து மழை பெய்யும் கூடலூர் பகுதியில் பச்சை தேயிலைக்கு இணையாக காபி, குறுமிளகு, ஏலக்காய், இஞ்சி, கிராம்பு உள்ளிட்ட பணப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றது.
பின்னர் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை பனிப்பொழிவு காலநிலை ஏற்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது கடும் பனிபொலிவு நிலவுகிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உறைபனி தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதேபோல் கூடலூர் பகுதியிலும் இரவில் பனிப்பொழிவும், பகலில் நன்கு வெயிலும் காணப்படுகிறது. இருவேறு கால நிலைகள் மாறுவதால் பச்சை தேயிலை விளைச்சல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் தெளிக்கும் பணி 

இதன் காரணமாக தேயிலை தோட்டங்களில் ‘ஸ்பிரிங்ளர்’ மூலம் தண்ணீர் தெளிக்கும் பணியை பெரிய மற்றும் சிறு குறு விவசாயிகள் தொடங்கி உள்ளனர். இதேபோல் பனிப்பொழிவு காரணமாக வனப்பகுதியில் புற்கள் கருகி வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கனமழை பெய்யும் மாதங்களில் போதிய சூரிய வெளிச்சம் கிடைக்காததால் பச்சை தேயிலை விளைச்சல் பரவலாக குறைந்து விடும். மழை மற்றும் வெயில் மிதமாக பச்சை தேயிலை விளைச்சல் அதிகரிக்கும். தற்போது மழைக்காலம் முடிந்து பனிக்காலம் நடைபெற்று வருகிறது. இரவில் பனியும், பகலில் வெயில் கடுமையாக இருப்பதால் தேயிலைச் செடிகளின் நுனியில் வளரக்கூடிய அரும்புகள் கருகி விடுகிறது. இதேபோல் தோட்டங்களில் ஈரத் தன்மையும் குறைந்து வருவதால் பச்சை தேயிலை விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க நீரோடைகள், கிணறுகளிலிருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு தேயிலை செடிகளுக்கு ‘ஸ்பிரிங்ளர்’ மூலம் தெளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story