மணிவிழுந்தான் ஏரியில் நீர்ப்பறவைகள் கணக்கெடுக்கும் பணி-மாவட்ட கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்


மணிவிழுந்தான் ஏரியில் நீர்ப்பறவைகள்  கணக்கெடுக்கும் பணி-மாவட்ட கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 29 Dec 2021 9:50 PM GMT (Updated: 29 Dec 2021 9:50 PM GMT)

மணிவிழுந்தான் தெற்கு ஏரியில் ஆசிய நீர்ப்பறவைகள் கணக்கெடுக்கும் பணியை சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேற்று தொடங்கி வைத்தார்.

தலைவாசல்:
மணிவிழுந்தான் தெற்கு ஏரியில் ஆசிய நீர்ப்பறவைகள் கணக்கெடுக்கும் பணியை சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேற்று தொடங்கி வைத்தார்.
மணிவிழுந்தான் ஏரி
தலைவாசல் அருகே மணிவிழுந்தான் தெற்கு ஏரி சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த ஏரியில் மழைநீர் நிரம்பி வழிகிறது. வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பறவைகள் இங்கு வந்து செல்கின்றன.
எனவே இந்த ஏரிக்கு வந்து செல்லும் பறவைகளை கணக்கெடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இதைதொடர்ந்து பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
கலெக்டர்
இந்த பணியை மாவட்ட கலெக்டர் கார்மேகம் தொலைநோக்கி மூலம் பார்த்து தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், தலைவாசல் மணிவிழுந்தான் ஊராட்சி ஒரு முன்மாதிரி ஊராட்சியாக அமையும் வகையில் அனைத்து பணிகளும் சிறப்பாக நடந்து வருகிறது. பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்ற முடியும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்ய வேண்டும். மணிவிழுந்தான் ஏரியை போன்று சேலம் மாவட்டத்தில் உள்ள 300 நீர்நிலைகளிலும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது என்றார்.
ஏற்பாடுகள்
நிகழ்ச்சியில் தலைவாசல் ஒன்றிய ஆணையாளர் தாமரைச்செல்வி, தலைவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ரமணன், ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரி நடேசன், பாரதி பிரபு, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மணித்துளி சுற்றுச்சூழல் மேம்பாட்டு இயக்கம், அக்சன் பவுண்டேசன், சேலம் பறவையியல் கழகம் ஆகியவை இணைந்து இந்த ஏரியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தன.

Next Story