புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள்:தங்கும் விடுதிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு தடை


புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள்:தங்கும் விடுதிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு தடை
x
தினத்தந்தி 29 Dec 2021 9:55 PM GMT (Updated: 29 Dec 2021 9:55 PM GMT)

சேலம் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தங்கும் விடுதிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தங்கும் விடுதிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம்
உலகம் முழுவதும் 2022 ஆங்கில புத்தாண்டு நாளை மறுநாள் (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. நாளை இரவு பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி புத்தாண்டை வரவேற்பார்கள். அதேசமயம், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஆடல், பாடல், இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், பண்ணை வீடுகளில் விழா களைகட்டும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறவில்லை.
இதனிடையே உருமாறிய கொரோனாவாக கருதப்படும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஏற்கனவே உள்ள கொரோனா கட்டுப்பாடு விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஏற்காட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
ஏற்காட்டில் 130 விடுதிகள் உள்ளன. இங்கு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சேலம் மாநகரில் பொது இடங்களில் மக்கள் கேக் வெட்டி கொண்டாடுவது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
தவிர்க்க வேண்டும்
கொரோனாவை தொடர்ந்து தற்போது உருமாறி ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் தங்கும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தினால் நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் வெளி இடங்களில் புத்தாண்டு கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும். அதேசமயம், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு என்ன உத்தரவு பிறப்பித்து உள்ளாரோ அதுவே சேலம் மாவட்டம் முழுவதும் கடைபிடிக்கப்படும். முடிந்த அளவுக்கு பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்ப்பது நல்லது. பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியில் ஒன்றாக கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேட்டூர் பூங்காவுக்கு செல்ல தடை
மேட்டூர் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் தடை விதிக்கப்படுகிறது என்றும், எனவே சுற்றுலா பயணிகள் யாரும் மேட்டூர் பூங்காவுக்கு வர வேண்டாம் எனவும் உதவி கலெக்டர் வீர் பிரதாப்சிங் தெரிவித்துள்ளார்.

Next Story