சுங்கச்சாவடி தொழிலாளர்கள் வேலை நீக்கத்துக்கு கண்டனம்: இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்-தலைவாசலில் நடந்தது


சுங்கச்சாவடி தொழிலாளர்கள் வேலை நீக்கத்துக்கு கண்டனம்: இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்-தலைவாசலில் நடந்தது
x
தினத்தந்தி 29 Dec 2021 9:58 PM GMT (Updated: 29 Dec 2021 9:58 PM GMT)

சுங்கச்சாவடி தொழிலாளர்கள் வேலைநீக்கத்துக்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரின் உண்ணாவிரத போராட்டம் தலைவாசலில் நடந்தது.

தலைவாசல்:
சுங்கச்சாவடி தொழிலாளர்கள் வேலைநீக்கத்துக்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரின் உண்ணாவிரத போராட்டம் தலைவாசலில் நடந்தது.
உண்ணாவிரத போராட்டம்
சுங்கச்சாவடி தொழிலாளர்களின் வேலை நீக்கத்தை கண்டித்தும், சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் தலைவாசல் பஸ் நிலையத்தில் நடந்தது.
சுப்பராயன் எம்.பி. தலைமை தாங்கினார். தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர் கூட்டமைப்பு மாநில தலைவர் ரவி, மாவட்ட செயலாளர் மோகன், தொழிற்சங்க பிரிவு மாவட்ட செயலாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை தலைவர் கருப்பணன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர்கள் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் காரல் மார்க்ஸ் சுங்கச்சாவடி தொழிலாளர்களின் நிலை குறித்து விளக்கி பேசினார்.
மாபெரும் போராட்டம்
போராட்டத்தில் சுப்பராயன் எம்.பி. பேசும் போது கூறியதாவது:-
தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள் மட்டும் இருந்தன. தற்போது 64 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் தாறுமாறாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்துவதற்கு மத்திய அரசு உடந்தையாக இருந்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் மேட்டுப்பட்டி, நத்தக்கரை, கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் மற்றும் நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய சுங்க சாவடிகளில் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இந்த தொழிலாளர்களை உடனே பணியில் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு தர வேண்டிய அனைத்து சலுகைகளையும் சுங்கச்சாவடி நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 15 நாட்களில் எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்த முடிவு எடுப்போம்.
இவ்வாறு சுப்பராயன் எம்.பி. பேசினார்.
போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவாசல் ஒன்றிய செயலாளர் ஷாஜகான், இந்திய கம்யூனிஸ்டு கடசி மாவட்ட நிர்வாகி வடகுமரை ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story