சேலம் அண்ணா பூங்காவில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு


சேலம் அண்ணா பூங்காவில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 29 Dec 2021 10:08 PM GMT (Updated: 29 Dec 2021 10:08 PM GMT)

சேலம் அண்ணா பூங்காவில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.

சேலம்:
சேலம் அண்ணா பூங்காவில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.
அண்ணா பூங்கா
சேலம் காந்தி விளையாட்டு மைதானம் அருகே அண்ணா பூங்கா உள்ளது. கொரோனா ஊரடங்குக்கு முன்பாக பூங்கா புதுப்பிக்கப்பட்டது. அதன்படி குழந்தைகள் விளையாடுவதற்கான பல்வேறு விளையாட்டு சாதனங்கள், யானை, சிங்கம் போன்ற விலங்குகளின் சிலைகள், நீச்சல் குளம், நடைபயிற்சி செய்ய இட வசதி என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் பூங்கா புதுப்பொலிவு பெற்றுள்ளது.
அண்ணா பூங்கா, குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா மற்றும் சினிமா தியேட்டர்கள் தவிர சேலத்தில் பொழுது போக்கிற்கு என்று தனியாக இடம் இல்லை. நகரில் ஆங்காங்கே சிறிய பூங்காக்கள் மட்டும் உள்ளன. இதனால் மாலை நேரங்களில் சேலம் மாநகர பொதுமக்கள் பொழுதை கழிப்பதற்காக அண்ணா பூங்காவிற்கு வருவார்கள்.
ஊரடங்கு உத்தரவு
இந்த நிலையில் கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் பரவத்தொடங்கியது. இதை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அண்ணா பூங்கா மற்றும் சிறிய பூங்காக்கள் என அனைத்தும் மூடப்பட்டன. வைரஸ் தாக்கம் குறைந்ததையொட்டி புதுப்பிக்கப்பட்ட அண்ணா பூங்கா கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
திறக்கப்பட்ட அன்று வண்ணவிளக்குகளின் அலங்கார காட்சியை பார்க்க பிரமிப்பாக இருந்தது. இந்த தகவல் மாநகர் முழுவதும் பரவியது. இதையறிந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் அண்ணா பூங்காவில் குவிந்தனர். இதனால் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதாக கூறி 2-வது முறையாக அண்ணா பூங்கா மூடப்பட்டது.
ஆணையாளர் ஆய்வு
தற்போது சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் அண்ணா பூங்கா திறக்கப்படுமா? என்று மாநகர மக்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேற்று அண்ணா பூங்காவிற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது பொழுது போக்கு சாதனங்கள், நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்தார். இதனால் விரைவில் அண்ணா பூங்கா திறக்கப்படலாம் என்று மக்கள் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர். 
இந்த ஆய்வின் போது என்ஜினீயர் ரவி, உதவி ஆணையாளர் மணிமொழி, உதவி செயற்பொறியாளர்கள் சிபி சக்ரவர்த்தி, செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story