‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 29 Dec 2021 10:17 PM GMT (Updated: 29 Dec 2021 10:17 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெருவில் ஓடும் சாக்கடை கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா பேளுக்குறிச்சி பழனியப்பார் கோவில் தெருவில் சாக்கடைநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்கள், நடந்து செல்பவர்களுக்கு நோய் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.் இந்த தெருவில் சாக்கடை கால்வாய் இல்லாததால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும்..
-ஊர்மக்கள், பேளூக்குறிச்சி, நாமக்கல்.
===
மயானத்தில் முட்செடிகள்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் அரசு பொது மயானம் முழுவதும் முட்செடிகள் வளர்ந்து காடு போன்று காட்சி அளிக்கிறது. இதனால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மயானத்தில் வளர்ந்து கிடக்கும் முட்செடிகளை அகற்ற வேண்டும்.
-கே.சிங்காரம், வெண்ணந்தூர், நாமக்கல்.
===
சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா? 

சேலம் ராம்நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அங்கு சாலை சீரமைக்கப்படாமல் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்கவும், சாக்கடை கால்வாயை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்நகர், சேலம்.

சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் சுமார் ஒரு வாரமாக ‌சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்த பகுதி முழுவதும் தூர்நாற்றம் அதிகம் வீசுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனே தலையிட்டு சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.
-மா.இளங்கோவன், சேலம்.
==
ஆபத்தான மின்கம்பம்

சேலம் சூரமங்கலம் பகுதியில் தார்ச்சாலை மிகுந்த சேதம் அடைந்து காணப்படுகிறது. இச்சாலையின் அருகில் அமைந்துள்ள மின்கம்பத்தில் இருந்து அங்குள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தில் காங்கிரீட் பெயர்ந்து கம்பி மட்டும் காட்சி அளிக்கிறது. இது எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. எனவே இந்த ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இருதயம், சூரமங்கலம், சேலம்.
=====
மீண்டும் டவுன் பஸ் இயக்கப்படுமா? 

சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து 62 எண் கொண்ட அரசு டவுன் பஸ் நெத்திமேடு, கொண்டலாம்பட்டி, அரியானூர், கல்பாரபட்டி வழியாக இளம்பிள்ளைக்கு இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி மீண்டும் டவுன் பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.பச்சமுத்து, நெத்திமேடு, சேலம்.
===
மதுப்பிரியர்கள் அட்டகாசம்

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பேரூராட்சியின் நங்கவள்ளி சாலையில் உள்ள தியேட்டரில் தொடங்கி பெட்ரோல் பங்க் வரையிலான இடைப்பட்ட சாலையின் ஓரத்திலும், சந்துகளிலும் மாலை நேரத்தில் மதுப்பிரியர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக மது அருந்தி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்கள் ஏதேனும் நடக்கும் முன்பு போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-பெ.ரமேஷ், நங்கவள்ளி, சேலம்.
===
சாலை சீரமைக்கப்படுமா? 

சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட தம்மநாயக்கன்பட்டி ஊராட்சி தீரானூர் ரெயில்வே கேட் அருகே தீரானூர்- தம்மநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் (சேலம் - கரூர் ரெயில் பாதையை ஒட்டிய பகுதியில்) சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது.  மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் தேங்கி நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், தீரனூர், சேலம்.

சேலம் மாநகராட்சி சின்னக்குட்டி தெருவில் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் அமைத்து 20  ஆண்டுகள் ஆகிறது. அந்த பகுதியில் உள்ள சாலை  சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலை முழுவதும் மழைநீருடன் சாக்கடைநீர் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் நடக்கவே சிரமமாக உள்ளது. எனவே சாலையை சீரமைத்து, சாக்கடை கால்வாய் அமைத்து தர வேணடும்.
-கோபால்சாமி, சின்னக்குட்டிதெரு, சேலம்.
===
தேங்கிக் கிடக்கும் குப்பைகள் 
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் கடை வீதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தேங்கி கிடக்கும் குப்பைகளை சுற்றி தெரு நாய்கள் கூட்டமாக சுற்றி திரிவதால் பொதுமக்கள் சாலையில் நடமாட முடியவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், ஏரியூர், தர்மபுரி.
==


Next Story