பொங்கல் பானை தயாரிக்கும் பணிகள் மும்முரம்


பொங்கல் பானை தயாரிக்கும் பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 30 Dec 2021 9:56 AM GMT (Updated: 30 Dec 2021 9:56 AM GMT)

பொங்கல் பானை தயாரிக்கும் பணிகள் மும்முரம்

உடுமலையில் பொங்கல் பானை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பொங்கல் பானை 
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையன்று புது மண்பாணையில் பொங்கலிடுவது தமிழர்களின் பழக்கமாக இருந்து வருகிறது. இடையில்பொதுமக்களிடம் மண்பாண்டங்களின் பயன்பாடு குறைந்து வந்த நிலையில், மண்பாண்டங்களை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றால் பரவிவந்தது.இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் மண்பாண்டங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.களிமண்ணால் பொங்கல் பானை, தண்ணீர் பானை, குடம், அகல் விளக்குகள், பனியாரச்சட்டிகள், மண் கலயம்  உள்ளிட்ட மண்பாண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.
தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பானை அதிகம் விற்பனையாகும் என்பதால், பொங்கல் பானை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.உடுமலை பகுதிக்கு இதற்கான மண் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குளத்தில் இருந்து வரும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கோதவாடி குளத்தில் இருந்து மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.இந்த நிலையில் சிலர் ஏற்கனவே இருப்பு இருந்த மண்ணை வைத்து பொங்கல்பானைகள் தயாரித்து வருகின்றனர்.
விற்பனை
பொங்கல் பானை தயாரிப்பு குறித்து உடுமலை அருகில் உள்ள எஸ்.வி.புரத்தைச்சேர்ந்த மண்பாண்டங்கள் தயாரிப்பாளர்கள் தங்கவேல், நாகராஜ் ஆகியோர் கூறியதாவது
மண்பாண்டங்கள் தயாரிப்பதற்கு கோதவாடி குளத்தில் இருந்து மண் எடுப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. ஏற்கனவே குளத்தில் இருந்து எடுத்து வந்த மண் இருப்பு இருந்தது. அந்த மண்ணை வைத்து தற்போது மண்பானை தயாரித்து வருகிறோம். இந்த மண்பானைகள் சூளையில் வைத்து சுடப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். அரிசி வேகக்கூடிய பானை ரூ.50க்கு விற்பனை செய்யப்படும்.அளவைப்பொறுத்து விலை இருக்கும்.3கிலோ அரிசி வேகக்கூடிய பானை ரூ.300 க்கு விற்பனை செய்யப்படும். பொங்கல் பானை விற்பனை  ஒரு வாரத்திற்குப்பிறகு  அதிகம் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story