புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 4 Jan 2022 9:45 PM GMT (Updated: 4 Jan 2022 9:45 PM GMT)

புகார் பெட்டி

ஆஸ்பத்திரி வேண்டும்

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் பேரூராட்சி பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள மக்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பெறவேண்டுமென்றால் கொடுமுடி அல்லது கொம்பனைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத்தான் செல்ல வேண்டும். இதனால் பாதிக்கப்படுபவர்கள் உடனடி சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். பல்வேறு தொற்று நோய்கள் பரவும் சூழ்நிலையில் ஊஞ்சலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
காவிரிசெல்வன், ஊஞ்சலூர்.

சாக்கடை வசதி

ஈரோடு 46 புதூர் ஊராட்சி விவேகானந்தர் நகரில் முறையான சாக்கடை வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாதைகளிலும், விவசாய நிலங்களிலும் தேங்கியுள்ளது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் விவேகானந்தர் நகருக்கு முறையான சாக்கடை வசதி செய்து கொடுக்கவேண்டும்.
  பொதுமக்கள், 46 புதூர்.

தலைகீழாக தொங்கும் கேமரா 

  ஈரோடு சம்பத்நகரில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டுக்கு முன்பு செல்லும் சாலையின் நடுவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இருபுறமும் செல்லும் வாகனங்களை கண்காணிக்கும் வகையில் 2 கேமராக்கள் உள்ளன. இதில் ஒரு கேமரா தலைகீழாக தொங்குகிறது. இதனால் கேமராக்கள் இருந்தும், வாகனங்களை கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. எனவே தலைகீழாக தொங்கும் கண்காணிப்பு கேமராவை சரியாக பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  தாமோதரன், ஈரோடு.
  
போக்குவரத்துக்கு இடையூறு

  திருச்சி, கரூர், மதுரையில் இருந்து வரும் பஸ்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வாசுகி வீதி வழியாக பஸ்நிலையத்துக்குள் நுழைகின்றன. வாசுகி வீதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு வருபவர்கள் தங்களுடைய இருசக்கர வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்தி விடுகிறார்கள். இதனால் பஸ்நிலையத்துக்குள் பஸ்கள் வருவதற்கு இடையூறாக உள்ளது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் வாசுகி வீதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.
  விநாயகன், ஈரோடு.
  
தூர்வாரப்படாத சாக்கடை

  ஈரோடு பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் வழியில் நாச்சியப்பா வீதியில் உள்ள சாக்கடை பல நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நாச்சியப்பா வீதியில் தேங்கியுள்ள சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  குமரன், ஈரோடு.
  
மின்கம்பத்தில் செடி-கொடிகள்

  ஈரோடு வீரப்பம்பாளையத்தில் ஒரு மின் கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் அருகில் செடி கொடிகள் படர்ந்து ஒயர் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்தப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மேலும் தீ விபத்தும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின்சாரத்துறை அதிகாரிகள் இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  கண்ணன், ஈரோடு.
  
வெளியேறும் கழிவுநீர்

  ஈரோடு குமலன்குட்டை அருகே உள்ள பூமாலை மண்டபம் அருகில் பெருந்துறை ரோட்டில் பாதாள சாக்கடையில் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இதை உடனே சரிசெய்வார்களா?
  ஜோதி, ஈரோடு.
  
பாராட்டு

  ஈரோடு மணிக்கூண்டு அருகே உள்ள அய்யனாரப்பன் கோவில் வீதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சென்றது. இதை சரி செய்ய வந்தவர்கள், குழாய் உடைப்பை அடைத்துவிட்டு, குழியை மூடாமல் சென்றுவிட்டார்கள். அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கு இந்த குழி ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து ஆபத்தான அந்த குழி மூடப்பட்டது. இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
  சந்தோஷ்குமார், அய்யனாரப்பன் கோவில் வீதி, ஈரோடு.
 


Next Story