குமரியில் மீன் சந்தை, இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது


குமரியில் மீன் சந்தை, இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 8 Jan 2022 9:01 PM GMT (Updated: 8 Jan 2022 9:01 PM GMT)

குமரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கையொட்டி நேற்று மீன் சந்தை, இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வெளியூர் செல்வதற்காக பஸ்நிலையத்திலும் பயணிகள் குவிந்தனர்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கையொட்டி நேற்று மீன் சந்தை, இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வெளியூர் செல்வதற்காக பஸ்நிலையத்திலும் பயணிகள் குவிந்தனர்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதோடு ஒமைக்ரான் அச்சுறுத்தலும் நிலவுவதால் நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த 6-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 
அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கையொட்டி நேற்று முன்கூட்டியே மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளில் குவிந்தனர்.
காய்கறி வாங்க கூட்டம்
நாகர்கோவிலை பொருத்தவரையில் வடசேரி கனகமூலம் சந்தை மற்றும் ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் ஆகிய இடங்களில் நேற்று மாலை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதே போல நாகராஜா கோவில் அருகில் அவ்வை சண்முகம் சாலை, கோர்ட்டு ரோடு, அண்ணா பஸ் நிலையம் முன்புறம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பெரிய காய்கறி கடைகளிலும் பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர்.
இதே போல கிராமபுறங்கள் மற்றும் கடற்கரை கிராமங்களில் உள்ள காய்கறி கடைகளிலும் தங்களுக்கு தேவையான காய்கறிகளை பொதுமக்கள் முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொண்டனர். மேலும் முழு ஊரடங்கால் பேக்கரிகள் மற்றும் பெட்டிக்கடைகளும் திறக்கப்படாது என்பதால் பொதுமக்கள் தங்களது வீட்டுக்கு தேவையான தின்பண்டங்களை வாங்க கடைகளில் குவிந்தனர். 
இறைச்சி கடைகளிலும் அலைமோதியது
இது ஒருபுறம் இருக்க மீன் சந்தைகள் மற்றும் இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. குமரி மாவட்ட மக்கள் இயல்பாகவே மீன் பிரியர்கள் ஆவர். அதோடு ஞாயிற்றுக்கிழமை என்றால் இறைச்சி சாப்பிடுவதையும் வாடிக்கையாக கொண்டவர்கள் என்பதால் முன்கூட்டியே இறைச்சியை பொதுமக்கள் வாங்க வந்ததை பார்க்க முடிந்தது. சில இடங்களில் தற்காலிக இறைச்சி கடைகளும் ஆங்காங்கே முளைத்திருந்தன. முழு ஊரடங்கையொட்டி மதுக்கடைகளும் மூடப்படுகிறது.
இதனால் மதுக்கடைகள் மூடக்கூடிய நேரமான நேற்று இரவு 10 மணியை நெருங்கும் சமயத்தில் மதுப்பிரியர்கள் போட்டி போட்டுக் கொண்டு மது வாங்கி சென்றதை காண முடிந்தது. 
இப்படி பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் நேற்று மாலை அதிகளவில் வாகனங்களில் வெளியே வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வடசேரி, ஒழுகினசேரி, கோட்டார், செட்டிகுளம், கலெக்டர் அலுவலக சந்திப்பு மற்றும் மணிமேடை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் ேபாக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருந்தது. அதிலும் வடசேரி பகுதியில் வாகனங்கள் நீண்ட தூரம் வரை ெமல்ல, மெல்ல ஊர்ந்தபடி சென்றன.
பஸ்நிலையத்தில்...
மேலும் வேலை முடிந்து வெளியூர் செல்வதற்காக நாகர்கோவில் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 
வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் முண்டியடித்தபடி ஏறியதை காணமுடிந்தது.

Next Story