பெங்களூருவில் கடையின் ஷெட்டரை உடைத்து ரூ.2 கோடி கை கெடிகாரங்கள் திருட்டு


பெங்களூருவில் கடையின் ஷெட்டரை உடைத்து ரூ.2 கோடி கை கெடிகாரங்கள் திருட்டு
x
தினத்தந்தி 8 Jan 2022 9:03 PM GMT (Updated: 8 Jan 2022 9:03 PM GMT)

பெங்களூருவில் கடையின் ஷெட்டரை உடைத்து ரூ.2 கோடி மதிப்பிலான விலை உயர்ந்த கைக்கெடிகாரங்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பெங்களூரு:

கை கெடிகாரங்கள் திருட்டு

  பெங்களூரு புலிகேசிநகரை சேர்ந்தவர் சாமோயில். இவர் இந்திராநகர் 100 அடி சாலையில் சிம்சன் டைம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கை கெடிகாரம் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் விலை உயர்ந்த கை கெடிகாரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சாமோயிலும், ஊழியர்களும் வீட்டிற்கு சென்று விட்டனர். நள்ளிரவில் அந்த கடைக்கு வந்த மர்மநபர்கள், கடையின் ஷெட்டரை உடைத்து கடைக்குள் புகுந்தனர்.

  பின்னர் கடைக்குள் இருந்த கண்ணாடிகளை உடைத்த மர்மநபர்கள் கண்ணாடி அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த 129 ரேடோ, 29 லோங்கினீஸ், 13 ஒமேகா என விலை உயர்ந்த கை கெடிகாரங்களை திருடிவிட்டு தப்பி சென்று விட்டனர். இந்த நிலையில் கடையின் ஷெட்டர் உடைக்கப்பட்டு இருப்பது பற்றி சாமோயிலுக்கு, கடையின் அருகே வசித்து வரும் மக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கடைக்கு வந்த சாமோயில் கை கெடிகாரங்கள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ரூ.2 கோடி மதிப்பு

  இதுபற்றிய தகவல் அறிந்ததும் இந்திராநகர் போலீசார் சம்பவம் நடந்த கடைக்கு விரைந்து சென்று சாமோயிலிடம் விசாரணை நடத்தினர். அப்போது கடையில் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான விலை உயர்ந்த கை கெடிகாரங்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதற்கிடையே அங்கு வந்த மோப்ப நாய் சம்பவம் நடந்த கடையில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. பின்னர் அந்த கடையில் பதிவாகி இருந்த கைரேகைகளை போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் பதிவு செய்து கொண்டனர்.

  பின்னர் அவற்றை தடய அறிவியல் பிரிவினருக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் நடந்த கடைக்கு வெளியே பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கடையை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து உள்ளதாகவும், இந்த திருட்டு பற்றி முக்கிய துப்பு கிடைத்து உள்ளதாகவும், திருட்டில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் திருட்டு சம்பவம் குறித்து சாமோயில் அளித்த புகாரின்பேரில் இந்திராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story