கோர்ட்டு வழக்குகளை கண்காணிக்க புதிய போலீஸ் பிரிவு


கோர்ட்டு வழக்குகளை கண்காணிக்க புதிய போலீஸ் பிரிவு
x
தினத்தந்தி 8 Jan 2022 9:11 PM GMT (Updated: 8 Jan 2022 9:11 PM GMT)

குமரி மாவட்டத்தில் கோர்ட்டு வழக்குகளை கண்காணிக்க போலீஸ் சார்பில் புதிய பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கோர்ட்டு வழக்குகளை கண்காணிக்க போலீஸ் சார்பில் புதிய பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது.
புதிய பிரிவு
குமரி மாவட்ட கோர்ட்டுகளில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே இந்த வழக்குகளை விரைந்து முடிக்கவும், வழக்கு தொடர்பான ஆவணங்களை முறையாக தாக்கல் செய்யவும், வழக்கு விசாரணைக்கு முறையாக ஆஜராகவும் போலீஸ் சார்பில் புதிய பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. மாவட்ட குற்ற ஆவண காப்பக போலீஸ் சூப்பிரண்டு பிச்சை மேற்பார்வையில் இந்த பிரிவு செயல்பட உள்ளது. 
இந்த புதிய பிரிவில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் ஒவ்வொரு சப்-டிவிஷனுக்கும் தனித்தனி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக போலீசாருக்கு விளக்கம் அளிக்கும் சிறப்பு பயிற்சி நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது.
வழக்கு நிலுவை
இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:-
சில அதிகாரிகள் குமரி மாவட்டத்தில் பணியாற்றிவிட்டு வேறு மாவட்டங்களுக்கு சென்ற பின்னர், அவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதால் அந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது.
 எனவே இதுபோன்ற நெருக்கடி சூழ்நிலைகளை தவிர்க்கும் வகையில் தற்போது புதிய பிரிவு செயல்படும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த தேதியில் ஆஜராக வேண்டும் என்பது தொடர்பாக முறையான தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள வசதியாக இருக்கும். இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோர்ட்டு பணிகளில் வேகமாக செயல்பட வேண்டும். சம்மன் கொடுப்பது, சாட்சியங்களை ஆஜர்படுத்துவது, ஆவணங்களை தாக்கல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் தாமதம் கூடாது என்பதற்காக இந்த சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. கோர்ட்டு கேட்கக்கூடிய ஆவணங்கள், சாட்சியங்களை முறையாக போலீசார் ஆஜர்படுத்த வேண்டும். இந்த பிரிவு முதன் முறையாக குமரி மாவட்டத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார். 
இந்த பயிற்சியில் இன்ஸ்பெக்டர்கள் கண்மணி, ஜானகி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story