வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடிய சாலைகள்


வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடிய சாலைகள்
x
தினத்தந்தி 16 Jan 2022 9:59 AM GMT (Updated: 16 Jan 2022 9:59 AM GMT)

வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடிய சாலைகள்

உடுமலையில், முழு ஊரடங்கையொட்டி வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. 
முழு ஊரடங்கு
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. முழு ஊரடங்கையொட்டி உடுமலையில் பஸ்கள், வாடகை கார்கள், வேன்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை.மருத்துவ மனைகளுக்கு நோயாளிகளை அழைத்துச்சென்றுவருவதற்கு மட்டும் ஆங்காங்கு ஒன்றிரண்டு ஆட்டோக்கள் சென்று வந்தன. ஒருசில தனியார் கார்கள், ஒருசிலசரக்கு வாகனங்கள் மட்டும் ஓடின.
உடுமலை மத்திய பஸ்நிலையம், பழையபஸ் நிலையம், தாராபுரம் சாலைபைபாஸ்சாலை சந்திப்பு, பொள்ளாச்சி சாலை திருப்பூர் சாலை சந்திப்பு, தளிசாலை சிக்னல்பகுதி, பழனிசாலை கொழுமம் சாலை சந்திப்பு, தளிசாலை மேம்பாலம் பகுதி, டி.வி.பட்டிணம், எலையமுத்தூர் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ரோந்து பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்தவர்களை நிறுத்தி எங்கு, எதற்காக செல்கிறீர்கள் என்று விசாரித்தனர்.அப்போது பலர் மருத்துவ மனைக்கு செல்வதாகவும், மருந்து வாங்க செல்வதாகவும், பார்சல் சாப்பாடு வாங்குவதற்கு ஓட்டலுக்கு செல்வதாகவும் கூறி சென்றனர்.அவசிய தேவையின்றி சாலைகளில் சென்றவர்களை போலீசார் எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பினர்.
கடைகள் அடைப்பு
உடுமலை ராஜேந்திரா சாலையில் உள்ள நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் உள்ள தினசரி சந்தை மூடப்பட்டிருந்தது.இந்த வீதியில் காய்கறிகடைகள், மளிகைக்கடைகள், பழக்கடைகள் மற்றும் வரிசையாகஆட்டிறைச்சி கடைகள், கோழிக்கடைகள், மீன் கடைகள் உள்ளன. அதனால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.அத்துடன் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் இறைச்சிக்கடைகளில், மற்ற நாட்களை விட கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் கடைகள் திறக்கப்படாததால் இந்த சாலை வெறிச்சோடி காணப்பட்டது. ஓட்டல் கடைகளில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. பார்சல்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்டன.
அதை வாங்குவதற்கும் கூட்டம் குறைவாக இருந்தது.மருந்து கடைகள் சிலபால் கடைகள் மட்டும் திறந்திருந்தன.மளிகை கடைகள், காய்கறிகடைகள், நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை கடைகள், டீ கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.உடுமலை கபூர்கான் வீதியில் உள்ள உழவர் சந்தைக்கு  விடுமுறை விடப்பட்டிருந்தது.


Next Story