பேக்கரி கடை பெண் உரிமையாளரிடம் நகை பறித்த ஆட்டோ டிரைவர் கைது


பேக்கரி கடை பெண் உரிமையாளரிடம் நகை பறித்த ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 27 Jan 2022 9:35 AM GMT (Updated: 27 Jan 2022 9:35 AM GMT)

‘கேக்’ ஆர்டர் செய்வது போல் நடித்து பேக்கரி கடை பெண் உரிமையாளரிடம் நகை பறித்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

பேக்கரிக்கடை

மதுரவாயலை சேர்ந்தவர் நீலா (வயது 33). திருவேற்காடு பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் கேக் ஆர்டர் செய்வது போல் நீலாவிடம் பேசியுள்ளார்.

அப்போது நீலா அணிந்திருந்த சங்கிலியை பார்த்த அவர், மாடல் நன்றாக இருப்பதாகவும், அது போல் தனது மனைவிக்கு வாங்கி தர வேண்டும் என ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சங்கிலி மாடலை புகைப்படம் எடுத்து கொள்கிறேன் என அவர் கேட்டுகொண்டதையடுத்து, நீலா தனது கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை கழற்றி மேஜை மீது வைத்துள்ளார்.

அப்போது கடைக்கு மற்றொரு வாடிக்கையாளர் வந்த நிலையில், 2 பவுன் நகையை எடுத்துக்கொண்டு மர்மநபர் தப்பிச்சென்றார்.

கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த நீலா இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து திருவேற்காட்டில் இருந்து தி.நகர் வரை உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த திருவேற்காடு போலீசார், சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபரின் உருவத்தை வைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இதைத்தொடர்ந்து, சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தியாகராயநகரை சேர்ந்த ஏழுமலை (என்ற) துரை (33) என்பதும், ஆட்டோ ஓட்டி வந்த இவர், சூதாட்டத்தில் அதிக பணத்தை இழந்ததால் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவரை கைது செய்த போலீசார், தங்க சங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிளை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.


Next Story