கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்


கொடைக்கானலுக்கு படையெடுத்த  சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 30 Jan 2022 4:27 PM GMT (Updated: 30 Jan 2022 4:27 PM GMT)

முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதால், கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.

கொடைக்கானல்: 

சுற்றுலா பயணிகள் படையெடுப்பு
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 3 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை இன்றி கொடைக்கானல் வெறிச்சோடியது.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் தமிழக அரசு சில தளர்வுகளை அளித்தது. இதில் ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக, கொடைக்கானலுக்கு நேற்று சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.

வார விடுமுறை நாளான நேற்று அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. குறிப்பாக மோயர் பாயிண்ட்,  பைன் மரக்காடு, பில்லர்ராக், குணா குகை, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மேலும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

தரை இறங்கிய மேகக்கூட்டம்
கொடைக்கானல் பகுதியில் நேற்று கடும் குளிர் நிலவியது. இதனை பொருட்படுத்தாமல் ஏராளாமான சுற்றுலா பயணிகள் நகர் பகுதியில் வலம் வந்தனர். 

மேலும் மலை முகடுகளை முத்தமிட்டபடி வான் மேக கூட்டம் தவழ்ந்து செல்லும் காட்சி அரங்கேறியது. முகடுகளிடம் இருந்து இறங்கிய மேக கூட்டம், பிற்பகலில் தரையில் தள்ளாடிய காட்சி சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைத்தது.

 இந்த காட்சியை சுற்றுலா பயணிகள் ‘செல்பி’ மற்றும் புகைப்படம் எடுத்து உற்சாகம் அடைந்தனர். மேலும் கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து ஆனந்தம் அடைந்தனர். இன்னும் சிலர் ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டு மகிழ்ந்தனர்.

Next Story