பள்ளப்பட்டி நகராட்சி ஒரு கண்ணோட்டம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 31 Jan 2022 4:28 PM GMT (Updated: 31 Jan 2022 4:28 PM GMT)

பள்ளப்பட்டி நகராட்சி ஒரு கண்ணோட்டம் பார்ப்போம்.

அரவக்குறிச்சி
பள்ளப்பட்டி நகராட்சி
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பேரூராட்சி சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளப்பட்டி பேரூராட்சியாக இருந்தபோது 15 வார்டுகள் இருந்தது. தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 
பள்ளப்பட்டி நகராட்சிக்கு தலைவர் பதவி பெண் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளப்பட்டி பேரூராட்சியில் இதுவரை 9 பேர் பேரூராட்சி தலைவர்களாக இருந்துள்ளனர். 1.சுல்தார் வெள்ளையத்தா ராவுத்தர், 2.முத்தப்பாட்டு குத்தூஸ், 3.அப்புக்காரத்த மணியம் நிஸ்டர் ஹிதாயத்துல்லா (சாகுல் மணியார் தந்தை) பள்ளப்பட்டிக்கு போக்குவரத்து வசதி இவர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டு, முதன்முதலில் பஸ் விடப்பட்டது. 4.கூலாப்பா (என்கிற) கடத்தூர் அப்துல் சமது. இவர் காலத்தில்தான் சொட்டல் தண்ணீர் டேங்க் கட்டப்பட்டது. அன்றைய முதல்-அமைச்சர்  காமராஜ் நாடார் வருகை தந்து திறந்து வைத்தார்.
5.வாப்பு மஜீத் ஹாஜியார் இவர் காலத்தில்தான் கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட  பள்ளப்பட்டி எண்ணற்ற முன்னேற்றங்களை கண்டது. 6.முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் ஜப்பார். இவர் ஹஜ் சென்றிருந்த சமயம் அங்கு இருந்தே வெற்றி பெற்றார். 7.முனவர்ஜான். இவர்1996 - 2006 வரை தொடர்ந்து இரண்டு முறை தலைவராக இருந்து பெண் தலைவர் இவர். முதன் முறை கருணாநிதி முதல்-அைமச்சராக இருந்த போதிலும்,   இரண்டாம் முறை அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போதிலும் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார். 8.தோட்டம் பசீர் அகமது. இவர் பேரூராட்சித் தலைவராக இருந்த காலத்தில் பேரூராட்சி கட்டிடம் நவீனமயமாக்கப்பட்டது. 9.ஏ.சையது இப்ராஹீம். தி.மு.க. வின் கோட்டையான பள்ளப்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் தனித்து நின்று வெற்றி பெற்றது இதுவரையில் இவர் மட்டுமே. 
பொதுமக்கள்  எதிர்பார்ப்பு 
பள்ளப்பட்டி சின்னக்கடை வீதியில் சி.ஏ.பில்டிங் மாடியில் ஆரம்பகாலங்களில் பேரூராட்சி மன்றம் இயங்கி வந்தது. கூலாப்பா தலைவராக இருந்த காலத்தில் தான் கல்வெட்டில் புதிய பேரூராட்சி மன்றக் கட்டிடம் 1962-ல் தொடங்கப்பட்டது. தற்போது பள்ளப்பட்டி நகராட்சியில் உள்ள மொத்தம் 27 வார்டு பகுதிகளில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15,340 ஆண்களும், 16,163 பெண்களும், 1 திருநங்கையும் ஆக மொத்தமாக 31, 504 வாக்காளர்கள் உள்ளனர். பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் பள்ளிகள், வங்கிகள், பெண்கள் கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் உள்ளது. பள்ளப்பட்டி பகுதி பொதுமக்கள் பெரும்பாலும் வெளியூர்களிலும், வெளி மாநிலங்களிலும் தொழில் செய்து வருகிறார்கள். இருந்தபோதிலும் பள்ளப்பட்டி பகுதி மக்களுக்காக பள்ளப்பட்டி பகுதியில் எந்த ஒரு தொழிற்சாலையும் இல்லை. தற்போது பள்ளப்பட்டி நகராட்சியாக உள்ளபோது இனிமேலாவது இப்பகுதியில் ஒரு தொழிற்சாலை அமைய வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story