நீலகிரியில் 640 பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடக்கம்


நீலகிரியில் 640 பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடக்கம்
x
தினத்தந்தி 1 Feb 2022 10:28 AM GMT (Updated: 1 Feb 2022 10:28 AM GMT)

நீலகிரியில் 640 பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடந்து வருகிறது.

ஊட்டி

நீலகிரியில் 640 பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடந்து வருகிறது.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த மாதம் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. மேலும் கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கடந்த 27-ந் தேதி ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதிக்கப்பட்டது. இதற்காக பள்ளிகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்தது. இந்தநிலையில் நேற்று நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.
குன்னூர், கூடலூர் கல்வி மாவட்டங்களில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என மொத்தம் 640 பள்ளிகள் திறந்து செயல்பட்டது. கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் நேரடி வகுப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்த படி வருகை தந்தனர். அவர்களது உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொண்டு பதிவேட்டில் குறிக்கப்பட்டது. வகுப்பறைகளில் சமூக இடைவெளி விட்டு மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்களை நேரடியாக நடத்தினர்.

 கொரோனா பரிசோதனை

பள்ளியில் உணவு இடைவேளையின் போது முககவசத்தை அகற்றி உணவு அருந்திய பின்னர் உடனடியாக அணிய வேண்டும். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 
பள்ளிகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பள்ளிகள் மூடப்பட்டதால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வந்தது. அரசு பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்களை படித்தனர். தற்போது நேரடி வகுப்புகள் தொடங்கியதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

செமஸ்டர் தேர்வு

ஊட்டி அரசு கலைக்கல்லூரி நேற்று முதல் திறக்கப்பட்டது. இளங்கலை, முதுகலையில் அனைத்து பாடப்பிரிவு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலம் நடந்தது. அவர்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே செமஸ்டர் தேர்வு எழுதினர். 
மாணவர்கள் வசிக்கும் பகுதிகளில் இணையதள வசதி இல்லாதபட்சத்தில் கல்லூரிக்கு வந்து தேர்வை ஆன்லைனில் எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கூடலூரில் திறப்பு

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காலையில் மாணவ -மாணவிகள் மிகுந்த ஆர்வமுடன் பள்ளிக்கூடங்களுக்கு வந்தனர். அப்போது பள்ளியில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சமூக இடைவெளியை பின்பற்றி உடல் வெப்ப பரிசோதனை, கிருமி நாசினிகளை கொண்டு கைகளை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. பின்னர் மாணவ- மாணவிகள் சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்புகளுக்கு சென்று பாடங்களை படிக்க தொடங்கினர். இதுகுறித்து ஆசிரியர்கள் தரப்பில் கூறும்போது, ஊரடங்குக்குப் பிறகு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கூடங்களுக்கு வந்துள்ளதாக தெரிவித்தனர்.

Next Story