சுற்றுலா தலங்களில் பார்வை நேரம் நீட்டிப்பு


சுற்றுலா தலங்களில் பார்வை நேரம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 1 Feb 2022 10:28 AM GMT (Updated: 1 Feb 2022 10:28 AM GMT)

கட்டுப்பாடுகளில் தளர்வு அளித்ததால் நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் பார்வை நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஊட்டி

கட்டுப்பாடுகளில் தளர்வு அளித்ததால் நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் பார்வை நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஊரடங்கில் தளர்வு

தமிழகத்தில் கொரோனா அதிகரித்ததால் கடந்த மாத தொடக்கத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 8-ந் தேதி முதல் சுற்றுலா தலங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டும் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருப்பது கட்டாயம். அதன் காரணமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உள்பட சுற்றுலா தலங்களில் மாலை 3 மணிக்கு மேல் நுழைவு டிக்கெட் வழங்கப்படவில்லை.
அதற்கு முன் டிக்கெட் பெற்று உள்ளே சென்றவர்கள் சுற்றி பார்த்து விட்டு வெளியே வர கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதனால் பலர் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை இருந்தது. அவர்கள் பூங்காக்கள் முன்பு நின்று புகைப்படம் எடுத்தும், மலைப்பாதையில் செல்லும்போது இயற்கை அழகை கண்டு ரசித்தும் பொழுதை போக்கினர். தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் சுற்றுலா தலங்களில் பார்வை நேர கட்டுப்பாட்டில் தளர்வு அளித்த கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி வழக்கம்போல் செயல்பட அனுமதித்தார். அதன்படி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தேயிலை பூங்கா, சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வழக்கம்போல் திறந்து செயல்பட்டது. பூங்காக்களில் காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம். படகு இல்லங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை படகு சவாரி செய்து மகிழலாம்.
இருப்பினும் புல்வெளிகளில் அமர தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது. பார்வை நேரம் பழைய நிலைக்கு மாற்றப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தற்போது தினமும் 2 ஆயிரத்துக்கும் கீழ் தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கட்டுப்பாடு தளர்வு காரணமாக வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Next Story