திருவொற்றியூர் போலீஸ் நிலையம் முன் மகன் கைதை கண்டித்து தாய் தீக்குளிக்க முயற்சி


திருவொற்றியூர் போலீஸ் நிலையம் முன் மகன் கைதை கண்டித்து தாய் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 6 Feb 2022 10:22 AM GMT (Updated: 6 Feb 2022 10:22 AM GMT)

மகனை கைது செய்வதை கண்டித்து திருவொற்றியூர் போலீஸ் நிலையம் முன் தாய் தீக்குளிக்க முயன்றார். அவரை தீக்குளிக்க விடாமல் அங்கிருந்த பெண் போலீஸ் காப்பாற்றினார்.

கைது செய்ய நடவடிக்கை

திருவொற்றியூர் சின்ன மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அகில் என்ற சாகுல்அமீது (வயது 27). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

அந்த வரிசையில் நேற்று முன்தினம் மாலை அகிலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அகிலின் தாயார் அன்சரி (49) போலீஸ் நிலையத்துக்கு வந்து மகன் கைது குறித்து கேட்டு போலீசாருடன் தகராறு செய்தார்.

தீக்குளிக்க முயற்சி

பின்னர் போலீஸ் நிலையத்துக்கு வெளியே வந்த அன்சரி, திடீரென தான் மறைத்து வைத்து இருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சுகன்யா என்ற பெண் போலீஸ், கண்ணிமைக்கும் நேரத்தில் அன்சரி கையில் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை தட்டிவிட்டு அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது பெண் போலீஸ் மீதும் மண்எண்ணெய் பட்டது. இருப்பினும் அந்த பெண் மேற்கொண்டு தீவைத்து விடாமல் அவரை இறுக கட்டிப்பிடித்துக்கொண்டு மற்ற போலீசாரை உதவிக்கு அழைத்தார். உடனே அங்கிருந்த மற்ற போலீசார், ஓடிவந்து 2 பேர் மீதும் தண்ணீரை ஊற்றினர்.

ெபண் போலீசுக்கு பாராட்டு

பின்னர் அன்சரியை போலீஸ் நிலையத்துக்குள் அழைத்துச் சென்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் திருவொற்றியூர் போலீஸ் நிலையம் பரபரப்பானது.

உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கு பிறகு, போலீசாரை மிரட்ட தீக்குளிக்க முயற்சி செய்த பெண் அன்சரியை போலீசார் கைது செய்தனர். புத்திசாலித்தனமாக செயல்பட்டு நடக்க இருந்த அசம்பாவிதத்தை தவிர்த்த பெண் போலீஸ் சுகன்யாவை மற்ற போலீசார் ெவகுவாக பாராட்டினர்.



Next Story