பழவேற்காடு பகுதிக்கு சுற்றுலா சென்ற 2 பேர் ஏரியில் மூழ்கி சாவு


பழவேற்காடு பகுதிக்கு சுற்றுலா சென்ற 2 பேர் ஏரியில் மூழ்கி சாவு
x
தினத்தந்தி 24 Feb 2022 10:13 AM GMT (Updated: 24 Feb 2022 10:13 AM GMT)

சென்னையில் இருந்து பழவேற்காடு பகுதிக்கு சுற்றுலா சென்ற 2 பேர் ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

ஏரியில் மூழ்கினர்

பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும் பலர் விதிமுறைகளை மீறி சுற்றுலா பயணிகள் படகு சவாரி செல்கின்றனர். இந்த நிலையில் சென்னை பாடியை சேர்ந்த 20 பேர் பழவேற்காடு பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.

பின்னர் அவர்கள் 2 படகில் பழவேற்காடு ஏரியில் சென்று முகத்துவார பகுதிக்கு சென்று பொழுதை கழித்தனர். பின்னர், அங்கு ஏரியும் கடலும் கலக்கும் இடமாக திகழும் முகத்துவார பகுதியில் ஏரியை ஒட்டி குளித்து கொண்டிருந்தனர். அப்போது பாடியை சேர்ந்த கதிரவன் (வயது 20) மற்றும் செல்வராஜ் (47) ஆகியோர் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால் மாயமாகினர். இதைக்கண்டு உடன் வந்த சுற்றுலா பயணிகள் பீதியில் அலறினர்.

சாவு

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் படகில் சென்று கொண்டிருந்த மீனவர்கள் ஏரியில் குதித்து அவர்கள் இருவரையும் ஏரியில் தேடினர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கண்டுபிடித்த மீனவர்கள் உடனடியாக மீட்டு, பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த திருப்பாலைவனம் போலீசார் கதிரவன் மற்றும் செல்வராஜ் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story