தாம்பரத்தில் தடையை மீறி அணிவகுப்பு; பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கைது


தாம்பரத்தில் தடையை மீறி அணிவகுப்பு; பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கைது
x
தினத்தந்தி 7 March 2022 10:14 AM GMT (Updated: 7 March 2022 10:17 AM GMT)

தாம்பரத்தில் தடையை மீறி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஊர்வலம் செல்ல முயன்றனர். இதனால் அமைப்பை சேர்ந்த பெண்கள் உள்பட 2,500 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பாக, ‘மக்களாட்சியை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் ஒற்றுமை அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு போலீசார் தடை விதித்தனர்.

ஆனால் தடையை மீறி அணிவகுப்பு நடத்துவோம் என்று கூறி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் முகமது ஷேக் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், தேசிய பெண்கள் முன்னணி மாநில பொதுச்செயலாளர் ஷர்மிளா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் சதக்கத்துல்லா மற்றும் பெண்கள் உள்பட சுமார் 2,500-க்கும் மேற்பட்டோர் தாம்பரம் காந்தி சாலையில் ஒன்று திரண்டனர். அங்கு 500-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.

அணிவகுப்புக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தடையை மீறி அணிவகுப்பு நடத்த முயன்ற பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த பெண்கள் உள்பட 2,500 பேரை போலீசார் கைது செய்தனர். அனைவரையும் பஸ்களில் ஏற்றிச் சென்று தாம்பரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைதான அனைவரும் இரவில் விடுதலை செய்யப்பட்டனர். இதன் காரணமாக தாம்பரம் காந்தி சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள்.


Next Story