சவுகார்பேட்டை நகைப்பட்டறையில் தங்கக்கட்டிகளுடன் வடமாநில தொழிலாளி தப்பி ஓட்டம்


சவுகார்பேட்டை நகைப்பட்டறையில் தங்கக்கட்டிகளுடன் வடமாநில தொழிலாளி தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 17 March 2022 10:17 AM GMT (Updated: 17 March 2022 10:17 AM GMT)

சென்னை சவுகார்பேட்டை நகைப்பட்டறையில் இருந்து 1½ கிலோ தங்கக்கட்டிகளுடன் தப்பி ஓடிய வடமாநில தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

நகைப்பட்டறை

சென்னை வேப்பேரி இ.வி.ஆர்.தெருவைச் சேர்ந்தவர் அனுமந்துகுமார். இவரது மகன் ஜதின்குமார் (வயது 33). இவருக்கு சொந்தமாக சென்னை பூக்கடை என்.எஸ்.போ. ரோட்டில் நகைக்கடை உள்ளது. மேலும் இந்த நகை கடைக்கும் மற்றும் ஆர்டரின் பேரில் நகை செய்வதற்கும் சொந்தமாக சவுகார்பேட்டையில் உள்ள பெருமாள் கோவில் கார்டன் தெருவில் நகைப்பட்டறை ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பட்டறையில் 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த நகைப்பட்டறையில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த குமார்ஷா  என்பவர் நகை செய்யும் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நகைப்பட்டறை உரிமையாளரின் நம்பிக்கைக்கு உரியவராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

1½ கிலோ தங்கக்கட்டிகள் மாயம்

இதனால் இவரை தங்க நகை பட்டறைக்கு மேலாளராக பொறுப்பு கொடுத்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென குமார்ஷா மாயமானார். இந்த தகவலை அறிந்த ஜதின்குமார் நகைப் பட்டறைக்கு சென்று நகைகளை சரி பார்த்தபோது ரூ.60 லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ தங்கக்கட்டிகள் மாயமானது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜதின்குமார், சந்தேகத்தின் பேரில், ஊழியர் குமார்ஷாவின் சொந்த ஊரான மேற்கு வங்கத்திற்கு தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அவர் அங்கும் வரவில்லை என உறவினர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜதின்குமார் யானைகவுனி போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தங்க கட்டிகளுடன் தப்பி ஓடி தலைமறைவான மேலாளர் குமார்ஷாவை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story