பெரியகுளத்தில் மகளிர் போலீஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்


பெரியகுளத்தில் மகளிர் போலீஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 25 March 2022 4:13 PM GMT (Updated: 25 March 2022 4:13 PM GMT)

பெரியகுளத்தில் புதிதாக அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் வாடகை கட்டிடத்தில் போலீஸ் நிலையத்தை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தேனி:
பெரியகுளத்தில் புதிதாக அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் வாடகை கட்டிடத்தில் போலீஸ் நிலையத்தை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
நீண்டகால கோரிக்கை
தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, போடி, உத்தமபாளையம் ஆகிய 5 போலீஸ் உட்கோட்டங்கள் உள்ளன. இதில், பெரியகுளம் போலீஸ் உட்கோட்டத்தை தவிர மீதமுள்ள 4 உட்கோட்டங்களிலும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்ளன. பெரியகுளம் உட்கோட்ட பகுதிகளுக்கான வழக்குகள் அனைத்தும் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் போலீசார் பணிச்சுமையால் பரிதவித்து வருகின்றனர். மேலும், பொதுமக்களும் நீண்ட தூரம் பயணம் செய்து போலீஸ் நிலையம் வர வேண்டிய நிலைமை உள்ளது. இதுபோன்ற காரணங்களால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டு வந்தது. பொதுமக்கள் மற்றும் போலீசாரின் நலன் கருதி பெரியகுளத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று நீண்டகாலமாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
விரைவில் திறப்பு
இந்தநிலையில் தற்போது பெரியகுளத்தில் புதிதாக அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க தமிழ்நாடு காவல் துறை அனுமதி அளித்துள்ளது. இந்த போலீஸ் நிலையம் பெரியகுளம் நகர் பகுதியில் அமைய உள்ளது. இந்த போலீஸ் நிலையத்தை விரைவில் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த போலீஸ் நிலையத்துக்கு தேவையான அதிகாரிகள், போலீசாரை நியமிக்கவும், தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் போலீஸ் நிலையத்தை திறக்கவும் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக பெரியகுளத்தில் ஒரு வணிக வளாகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி விரைவில் போலீஸ் நிலையத்தை திறக்க மாவட்ட போலீஸ் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story