நாகர்கோவிலில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 March 2022 4:20 PM GMT (Updated: 29 March 2022 4:20 PM GMT)

2-வது நாள் வேலைநிறுத்தத்தையொட்டி நாகர்கோவிலில் தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்:
2-வது நாள் வேலைநிறுத்தத்தையொட்டி நாகர்கோவிலில் தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2-வது நாள் வேலைநிறுத்தம்
தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக்கூடாது, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டியை குறைக்கக் கூடாது, நாட்டின் சொத்துக்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கக்கூடாது, பொதுத் துறைகளை, வங்கிகளை தனியார்மயமாக்கக்கூடாது, எல்.ஐ.சி. பங்குகளை விற்கக்கூடாது, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை அன்றாடம் உயர்த்தி மக்களை தண்டிக்கக் கூடாது,
பொது வினியோக திட்டத்தையும், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தையும் பரவலாக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எல்.பி.எப்., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்த அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கடந்த 2 நாட்களாக நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. நேற்று 2-வது நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
இந்த போராட்டத்தையொட்டி குமரி மாவட்டத்தில் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன. பஸ்கள் குறைவாக இயக்கப்பட்டன. இதனால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகினர். பொதுவேலை நிறுத்தத்தின் 2-வது நாளான நேற்று போராட்டக்குழுவின் சார்பில் நாகர்கோவில் கோர்ட்டு  ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு குமரி மாவட்ட தொழிற்சங்கக் கூட்டுக் குழுவின் தலைவர் ராமச்சந்திரன் (ஏ.ஐ.டி.யு.சி.) தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் மத்திய - மாநில அரசு ஊழியர்கள். எல்.ஐ.சி.. வங்கி, பி.எஸ்.என்.எல்., மருத்துவ பிரதிநிதிகள், ஓய்வூதியர்கள் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அந்தோணி (சி.ஐ.டி.யு.) வரவேற்று பேசினார். ராஜு (பி.எஸ்.என்.எல். சங்க மாநில செயலாளர்) தொடக்க உரையாற்றினார்.
கொளுத்தும் வெயிலில்...
காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் பினுலால்சிங், ராதாகிருஷ்ணன் (ஐ.என்.டி.யு.சி.), ஞானதாஸ், இளங்கோ (எல்.பி.எப்.), முத்துக்கருப்பன் (எச்.எம்.எஸ்.) சந்திரன் (எம்.எல்.எப்.), ராஜு (ஏ.ஐ.டி.யு.சி.), பாலகிருஷ்ணன் (அரசு ஊழியர் சங்கம்). கிறிஸ்டோபர் (அரசு ஊழியர் சங்க மாநில தலைவர்), பென்னட் (முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம்), ஜலீல் (எல்.ஐ.சி. ஊழியர் சங்கம்), சிதம்பரம் (வங்கி ஊழியர் சங்கம்), ஷாகுல் அமீது (வங்கி ஊழியர் சம்மேளனம்), ஐவின் (ஓய்வூதியர் கூட்டமைப்பு), அய்யப்பன் பிள்ளை (ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கம்), முரளீதரன் (ஓய்வு பெற்ற அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு), ராதாகிருஷ்ணன் (கல்லூரி ஆசிரியர்கள் சங்கம்) உள்பட பலர் போராட்டத்தை விளக்கி பேசினர். முடிவில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன் நிறைவுரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story