12 விவசாய சங்கங்களுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள்


12 விவசாய சங்கங்களுக்கு மானிய  விலையில் வேளாண் எந்திரங்கள்
x
தினத்தந்தி 29 March 2022 4:24 PM GMT (Updated: 29 March 2022 4:24 PM GMT)

குமரி மாவட்டத்தை சேர்ந்த 12 விவசாய குழுக்கள் மற்றும் சங்கங்களுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தை சேர்ந்த 12 விவசாய குழுக்கள் மற்றும் சங்கங்களுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்.
வேளாண் எந்திரங்கள்
குமரி மாவட்ட வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, பட்டுவளர்ச்சித்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு கிராம அளவிலான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா தலைமை தாங்கினார்.
இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கி பேசியதாவது:-
ரூ.96 லட்சம் மானியம்
விவசாயிகள் பயன்பெறும் வகையிலும், பண்ணை பணியாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கிலும், வேளாண் பணிகளை உரிய காலத்தில் மேற்கொள்ளும் பொருட்டும், பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் குழுக்கள் மற்றும் சங்கங்களுக்கு வேளாண்மை எந்திரங்கள் மற்றும் கருவிகள், வாடகை மையம் அமைத்து கொடுக்கும் திட்டத்தினை தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விவசாய குழுக்கள் மற்றும் சங்கங்கள் சொசைட்டிகள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, தற்போது வரை சங்கம் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
பதிவு செய்யப்பட்டு தற்போது வரை செயல்பாட்டிலுள்ள குழுக்கள் மற்றும் சங்கங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்குவதற்கு 80 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் மட்டும் அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், குருந்தங்கோடு மற்றும் திருவட்டார் வட்டாரத்திற்குட்பட்ட கீழத்தேரூர் கிராம விவசாய சங்கம், விஜயநகரி கிராம விவசாய சங்கம், வெள்ளமோடி சுற்றுவட்டார பூமி பாதுகாப்பு சங்கம், புல்லுவிளை விவசாய நெல் ஆர்வலர் குழு, அரசமூடு குன்னன்காடு கிராம விவசாய சங்கம். ஈத்தாமொழி கிராம வேளாண்மை எந்திரமயமாக்கும் சங்கம், கொட்டாரம்- அகஸ்தீஸ்வரம் வட்டார அளவிலான கூட்டமைப்பு, ராஜாக்கமங்கலம் வட்டார அளவிலான கூட்டமைப்பு, கொட்டூர் அருவிக்கரை கிராம வேளாண் எந்திரமயமாக்கும் சங்கம், மணவிளை கிராம விவசாய சங்கம், கல்லத்திவிளை கிராம விவசாய சங்கம். தாழக்குடி கிராம விவசாய நல சங்கம் ஆகிய 12 விவசாய குழு மற்றும் சங்கத்திற்கு தலா ரூ.8 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ.96 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு பரிசு
மாவட்ட பட்டுவளர்ச்சித்துறையின் சார்பில் மாநில திட்டம் 2021-2022 -ம் ஆண்டில் மாவட்ட அளவில் பட்டு விவசாயிகள் குமரி மாவட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொண்டு, பட்டுக்கூடு அறுவடை செய்து, மாவட்ட அளவில் பிற விவசாயிகளை விட அதிக வருமானம் பெற்ற ஆரல்வாய்மொழியை சேர்ந்த அனந்தப்பன் என்ற விவசாயி முதலிடம் பிடித்தமைக்காக ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையும், குமாரபுரத்தை சேர்ந்த ரவி என்ற விவசாயி இரண்டாம் இடத்தை பிடித்தமைக்காக ரூ.20 ஆயிரம் பரிசுத்தொகையும், களியங்காடு பகுதியை சேர்ந்த கங்காராம் என்ற விவசாயி மூன்றாம் இடம் பிடித்தமைக்காக ரூ.15 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
முன்னதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்து இருந்த டிராக்டரை ஓட்டி பார்த்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வாணி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சொர்ணலதா, மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து உதவி பொறியாளர்கள், தி.மு.க. மீனவரணி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் நசரேத் பசலியான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story