போலி கையெழுத்திட்டு பல லட்சம் ரூபாய் வாடகை பாக்கி மோசடி


போலி கையெழுத்திட்டு பல லட்சம் ரூபாய் வாடகை பாக்கி மோசடி
x
தினத்தந்தி 30 March 2022 4:18 PM GMT (Updated: 30 March 2022 4:18 PM GMT)

நாகர்கோவிலில் போலி கையெழுத்திட்டு வக்கீல் வங்கி கணக்கில் பணம் செலுத்தி பல லட்சம் ரூபாய் வாடகை பாக்கி மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் போலி கையெழுத்திட்டு வக்கீல் வங்கி கணக்கில் பணம் செலுத்தி பல லட்சம் ரூபாய் வாடகை பாக்கி மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மூத்த வக்கீல்
நாகர்கோவில் ராமவர்மபுரத்தை சேர்ந்தவர் சங்கர சுப்பிரமணி (வயது 84), மூத்த வக்கீல். இவர் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் எனக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள ஒரு கடையை பரந்தாமன் என்பவர் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். வாடகை ஒப்பந்த அடிப்படையில் அவருக்கு கடையை நடத்துவதற்கு அனுமதி வழங்கி இருந்தேன். ஆனால் அவர் வாடகை பாக்கி தரவேண்டி இருந்தது. இந்த நிலையில் எனது வங்கி கணக்குக்கு திடீரென பரந்தாமன் தரப்பில் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்துக்கான காசோலையை மாற்றியதாக தகவல் வந்தது. அந்த பணம் எனது உதவியாளர் சுடலைக்கண் என்பவர் மூலமாக வங்கியில் போடப்பட்டதாக வங்கி தரப்பில் கூறப்பட்டது. 
போலி கையெழுத்து
இதுபற்றி எனது உதவியாளரிடம் கேட்ட போது அவர் அப்படி எதுவும் இல்லை என கூறினார். எனவே வங்கிக்கு சென்று விசாரித்தேன். அப்போது எனக்கு காசோலை தந்தது போல காட்டுவதற்காக எனது உதவியாளர் பெயரில் போலியாக செல்லான் நிரப்பி, எனது வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தி மோசடி செய்தது தெரியவந்தது. ஒப்பந்தப்படி வாடகை பணம் பல லட்ச ரூபாய் தர வேண்டியது உள்ளது. அந்த பணத்தை அவர் கொடுக்காமல் வெறும் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை மட்டும் போலி கையெழுத்திட்டு டெபாசிட் செய்து மோசடி செய்துள்ளனர். வாடகை பிரச்சினையை திசை திருப்ப இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். எனக்கு தர வேண்டிய முழு பணத்தையும் உரிய முறையில் பெற்று தர வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் பரந்தாமன் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story