குளச்சல் நகராட்சி கூட்டத்தில் கைகலப்பு


குளச்சல் நகராட்சி கூட்டத்தில் கைகலப்பு
x
தினத்தந்தி 30 March 2022 4:28 PM GMT (Updated: 30 March 2022 4:28 PM GMT)

குளச்சல் நகராட்சி கூட்டத்தில் தலைவரை சிறை பிடிக்க முயன்றதால் கவுன்சிலர்கள் இடையே கை கலப்பு ஏற்பட்டது. மேலும், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குளச்சல்:
குளச்சல் நகராட்சி கூட்டத்தில் தலைவரை சிறை பிடிக்க முயன்றதால் கவுன்சிலர்கள் இடையே கை கலப்பு ஏற்பட்டது. மேலும், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகராட்சி கூட்டம்
குளச்சல் நகராட்சி முதல் சாதாரணக் கூட்டம் தலைவர் நசீர் தலைமையில் நேற்று நடந்தது. ஆணையர் ராஜாமாணிக்கம், துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், மேலாளர் பிரேமா, சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன், ஓவர்சியர் பிரம்ம சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்களின் விவரம் வருமாறு:-
ரகீம் (தி.மு.க):- மன்ற தீர்மானத்தில் 8 வார்டு பணிகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. 16 வார்டுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 24 வார்டு பணிகளை சேர்த்தப்பிறகு தீர்மானம் வாசிக்கலாம்.
இதே கருத்தை வலியுறுத்தி ஜாண்சன், பனிக்குருசு, ஜான்பிரிட்டோ, லாரன்ஸ் ஆகிய தி.மு.க. கவுன்சிலர்களும்  பேசினர்.
கவுன்சிலர்களுக்கு தனி அறை
தலைவர் நசீர்:- மாதம் மாதம் கூட்டம் நடக்கும் என்று கவுன்சிலர்களுக்கு தெரியும். விடுப்பட்ட வார்டு பணிகள் குறித்து அடுத்த கூட்டத்திற்கு முன் ஆணையரிடம் எழுதி கொடுங்கள். தீர்மானத்தில் சேர்க்கலாம்.
பனிக்குருசு:- துணைத்தலைவர், கவுன்சிலர்கள் நகராட்சிக்கு வந்தால் உட்கார தனி அறை ஒதுக்க வேண்டும்.
தலைவர்:- இதுகுறித்து ஒரு முடிவு எடுக்கலாம்.
பனிக்குருசு:- முடிவு எடுத்தப்பின் தீர்மானம் வாசிக்கலாம்.
ரகீம்:- தீர்மானத்தில் 16 வார்டுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 
ஆறுமுகராஜா (அ.தி.மு.க. ):- 16 வார்டுகளை சேர்த்து பேச கவுன்சிலருக்கு உரிமை இல்லை. சம்பந்தப்பட்ட கவுன்சிலர்கள் தங்கள் வார்டைப்பற்றி தனித்தனியாக பேசுங்கள்.
ஜாண் பிரிட்டோ:- தீர்மானத்தில் 24 வார்டுகளையும் சேர்த்தால்தான் கூட்டம் நடக்கும்.
ஆணையர்:- விடுப்பட்டதை மனுவாக எழுதி கொடுங்கள். அடுத்த கூட்டத்தில் சேர்க்கலாம்.
தலைவரை சிறைபிடிக்க முயற்சி
இவ்வாறு விவாதம் நடைபெற்று கொண்டிருந்த போது தலைவர் நசீர் எழுந்து, ‘ஏகமனதாக எல்லா தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. கூட்டம் முடிந்தது’ எனக்கூறியபடி தேசிய கீதம் பாடிவிட்டு வெளியேறினார். அப்போது தலைவர் வெளியே போகக்கூடாது என கூறி வாசலில் அவரை சிறைப்பிடிக்க முயற்சித்தனர். இதனால் கவுன்சிலர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் தலைவர் வெளியேறினார். 
இதையடுத்து கவுன்சிலர் ஜாண்சன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிக்கை புத்தகத்தில் எழுதக்கூடாது எனக்கூறி நகராட்சி ஊழியரிடமிருந்து புத்தகத்தை பறித்தார்.
உள்ளிருப்பு போராட்டம்
பின்னர் துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், கவுன்சிலர்கள் ஜாண்சன், பனிக்குருசு, ரமேஷ், ஜாண்பிரிட்டோ, ரகீம், அஜின்ரூத், சந்திர வயோலா, திலகா, மேரி, ஷீலா ஜெயந்தி ஆகியோர் நகராட்சி அலுவலக வாசற்படியில் அமர்ந்து கவுன்சிலர்களுக்கு அலுவலகத்தில் அறை ஒதுக்க வேண்டும். 24 வார்டு கோரிக்கைகளையும் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என கூறி கோஷமிட்டனர். பின்னர் இந்த கோரிக்கைகளை ஆணையர் நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தி ஆணையர் அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டம் இரவு 7 மணி வரை நீடித்தது. இதையடுத்து குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவங்களால் குளச்சல் நகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story