ரவுடிகள், சமூக விரோதிகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உறுதி


ரவுடிகள், சமூக விரோதிகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உறுதி
x
தினத்தந்தி 31 March 2022 4:14 PM GMT (Updated: 31 March 2022 4:14 PM GMT)

ரவுடிகள், சமூக விரோதிகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உறுதியுடன் கூறினார்.

விழுப்புரம், 

சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு குறித்து விழுப்புரம் காவல் சரகத்திற்குட்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமை தாங்கினார். வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா முன்னிலை வகித்தார்.

இதில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் விழுப்புரம் ஸ்ரீநாதா, கள்ளக்குறிச்சி செல்வக்குமார், கடலூர் சக்திகணேசன் மற்றும் 3 மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்துகொண்டனர்.

இரும்புக்கரம் கொண்டு...

கூட்டத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசியதாவது:-

விழுப்புரம் சரகத்தில் சட்டம்- ஒழுங்கை சிறப்பான முறையில் செயல்படுத்த வேண்டும். ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சாலை விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதுடன் சாலை பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கணினி குற்றத்தடுப்பு பிரிவு மூலம் சமூகவலைதளங்களை கண்காணித்து சைபர் குற்றங்களை தடுக்கவும், போலீசாரின் குறைகளை வாரந்தோறும் கேட்டறிந்து உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும்.

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழிப்புடன் பணியாற்ற...

நான் 22 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் சரகத்தில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றினேன். அப்போது விழுப்புரம், கடலூரில் சாதி கலவரங்கள், மோதல்கள் ஏற்படும்போது உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து தீர்வு கண்டிருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் குறிப்படும் வகையில் பெரிய கலவரங்கள், மோதல்கள் இல்லை. அமைதியான சூழ்நிலையில் சட்டம்- ஒழுங்கு பேணி காக்கப்பட்டு வருகிறது. சட்டம்- ஒழுங்கு பிரச்சினையில் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்படக்கூடாது. சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் போலீஸ் அதிகாரிகள் எப்போதும் விழிப்புடனும், துரிதமாகவும் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

போலீசாருக்கு வெகுமதி

அதனை தொடர்ந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு சவாலான குற்ற வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு புலன் விசாரணை செய்து வழக்குகளை கண்டுபிடித்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களையும், வெகுமதியையும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் யாரேனும் துணையாக இருந்தால் பாரபட்சமின்றி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சமீபத்தில்கூட சென்னை புறநகர் பகுதியில் குற்றவாளிகளுடன் ஒரு சில காவல்துறை அதிகாரிகள் தொடர்பில் இருந்தனர். அவர்களை கூண்டோடு களையெடுத்து அங்கிருந்து இடமாற்றம் செய்திருக்கிறோம். அதுபோல் தொடர் கண்காணிப்பும், தொடர் நடவடிக்கையும் எடுத்துக்கொண்டுதான் வருகிறோம். பாலியல் குற்றம் உள்ளிட்ட எல்லா வழக்குகளிலும் உடனடியாக கைது நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் மூலம் காலப்போக்கில் இதுபோன்ற குற்றங்கள் பெரியளவில் குறையும் என்றார்.

Next Story