ஓட்டுனர் உரிமம், சம்பளம் தராததை கண்டித்து ரிக் டிரைவர் காத்திருப்பு போராட்டம்


ஓட்டுனர் உரிமம், சம்பளம் தராததை கண்டித்து ரிக் டிரைவர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 31 March 2022 4:14 PM GMT (Updated: 31 March 2022 4:14 PM GMT)

ஓட்டுனர் உரிமம், சம்பளம் தராததை கண்டித்து ரிக் டிரைவர் காத்திருப்பு போராட்டம்

ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் நாடார் தெருவை சேர்ந்தவர் செங்கோடன் (வயது 61). இவர் ராசிபுரம் அருகே உள்ள எஸ்.ஆர்.வி. கார்டனில் வசிக்கும் ஒருவரது ரிக் வண்டியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் மராட்டிய மாநிலத்திற்கு ரிக் வண்டி ஓட்டி சென்ற நேரத்தில் அவரது ஒரிஜினல் ஓட்டுநர் உரிமத்தை ரிக் வண்டி உரிமையாளரிடம் கொடுத்து விட்டு சென்றதாக தெரிகிறது. ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்கும் தேதி காலாவதி ஆகிவிட்ட நிலையில் அதனை புதுப்பிப்பதற்காக ரிக் வண்டி உரிமையாளரிடம் செங்கோடன் அவரது ஓட்டுநர் உரிமத்தை கேட்டுள்ளார். 
அதேபோல் சம்பளத்தையும் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி அவர் ராசிபுரம் போலீசில் 40 நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். மேலும் செங்கோடன் வருமானம் இன்றி கஷ்டப்பட்டு வந்தார். இந்த நிலையில் செங்கோடன் நாமக்கல் மாவட்ட மோட்டார் என்ஜினீயரிங் தொழிலாளர் சங்கம் சார்பில் ராசிபுரம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இவருடன் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கை அட்டைகளை வைத்திருந்தனர். இது பற்றி கேள்விப்பட்டதும் ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு நாளில் தீர்வு காண்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

Next Story