2 ஆண்டுகளுக்கு பிறகு கிராமங்களில் களைகட்டிய பங்குனி திருவிழா நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபாடு


2 ஆண்டுகளுக்கு பிறகு கிராமங்களில் களைகட்டிய பங்குனி திருவிழா நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபாடு
x
தினத்தந்தி 1 April 2022 4:29 PM GMT (Updated: 1 April 2022 4:29 PM GMT)

தேனி மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கிராமங்களில் பங்குனி திருவிழா களை கட்டியுள்ளது. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

தேனி:
கொரோனா பரவல்
தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். பங்குனி திருவிழா, பங்குனி பொங்கல் விழா என்ற பெயர்களில் இந்த திருவிழா நடக்கும். இதில் பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்துவார்கள்.
ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டாக கோவில் திருவிழாக்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடந்தன. குறிப்பாக திருவிழாக்களில் பக்தர்கள் கூட்டமாக கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. பல மாதங்கள் கோவில்களும் பூட்டிக் கிடந்தன. இதனால், பல கிராமங்களில் மிக எளிமையாக திருவிழாக்கள் நடந்தன. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு திருவிழாக்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பங்குனி திருவிழா
இதனால், தேனி மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பங்குனி திருவிழா களைகட்டியுள்ளது. தேனி நகர், அன்னஞ்சி, போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், பங்குனி திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவில் பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
அதன்படி, தேனி அருகே அன்னஞ்சி காளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவில் பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, ஆயிரங்கண் பானை எடுத்தும், அலகு குத்தியும், கரும்பு தொட்டில் தூக்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். குழந்தை வரம் கிடைக்க வேண்டி கொண்டவர்களுக்கு குழந்தை பிறந்ததால், அந்த குழந்தைகளை கரும்புகளில் தொட்டில் கட்டி பல்லக்கு போன்று சுமந்தபடி கோவிலை சுற்றி வலம் வந்தனர். அதுபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் உற்சாகத்துடன் பங்குனி திருவிழா கொண்டாடி வருகின்றனர்.


Next Story