திண்டுக்கல்லில் இளநீர், கம்பங்கூழ் விற்பனை அமோகம்


திண்டுக்கல்லில் இளநீர், கம்பங்கூழ் விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 3 April 2022 4:19 PM GMT (Updated: 3 April 2022 4:19 PM GMT)

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் திண்டுக்கல்லில் இளநீர், கம்பங்கூழ் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல்:
கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகரித்து காணப்படுகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பான கடைகளையும், இளநீர், கம்பங்கூழ், மோர் விற்பனை கடைகளை தேடிச்செல்வார்கள். இதன் காரணமாக கோடை காலத்தில் குளிர்பானங்கள், இளநீர் மற்றும் கம்பங்கூழ் விற்பனை அதிகரிக்கும். உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன் புத்துணர்ச்சியையும் இளநீரும், கம்பங்கூழும் கொடுக்கிறது. திண்டுக்கல்லில் சாலையோரங்களில் தற்காலிக கடைகளை அமைத்து இளநீர் விற்பனை நடக்கிறது. ஒரு இளநீர் ரூ.20 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது.
அதேபோல் நகரின் முக்கிய வீதிகளில் தள்ளுவண்டிகள் மூலம் கம்பங்கூழ் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு செம்பு கம்பங்கூழ், மோர் ஆகியவை ரூ.15-க்கு விற்கப்படுகிறது.  குறைந்த விலையில் இவை கிடைப்பதால் வெயில் காலத்தில் கம்பங்கூழ் மற்றும் இளநீர் விற்பனை படுஜோராக நடக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள், பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் போலீசார் என அனைத்து தரப்பினரும் தற்போது இளநீர், கம்பங்கூழ் விற்பனை கடைகளை தேடிச்செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் விற்பனை அமோகமாக நடக்கிறது. 

Next Story