பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரி செய்து மாங்குரோவ் காடுகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்


பிச்சாவரம் சுற்றுலா மையத்தில்  படகு சவாரி செய்து மாங்குரோவ் காடுகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 3 April 2022 4:24 PM GMT (Updated: 3 April 2022 4:24 PM GMT)

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரி செய்து மாங்குரோவ் காடுகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

பரங்கிப்பேட்டை 

சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட பிச்சாவரத்தில் சுற்றுலா மையம் உள்ளது. இங்கு கடற்கரையை ஒட்டி உள்ள உப்பனாற்றில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், 3,500 கால்வாய்களுடன் மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ளன. சுரபுன்னை மரங்களை கொண்ட இந்த காடுகள் மருத்துவ குணம் கொண்டவையாகும். 
ஒரு புறம் கடல், இன்னொருபுறம் பச்சைபசேல் என்று படர்ந்து காணப்படும் சுரபுன்னை மரங்கள் என இயற்கை எழில் மிகுந்து காணப்படும் இந்த மாங்குரோவ் காடுகளை படகுகளில் சென்று பார்வையிடுவது கண்கொள்ளா காட்சியாகவே இருக்கும். இதை கண்டு மகிழ்வதற்காக உள்ளூர் மட்டுமின்றி, வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வேன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கிறார்கள். 
கோடை காலங்களில் சீசன் களை கட்டும். 

தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகை ஓரளவு தொடங்கி உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகமாக காணப்பட்டது. குடும்பத்துடன் வந்த அவர்கள் எந்திரம் மற்றும் துடுப்பு படகுகளில் சவாரி செய்து உப்பனாற்றில் உள்ள கால்வாய்களுக்கு இடையே சென்றபடி இருபக்கமும் வளர்ந்து நிற்கும் சுரபுன்னை மரங்களை பார்த்து மகிழ்ந்தனர். மேலும் சிலர் சுரபுன்னை மரங்களின் வேர், இலை ஆகியவற்றையும் வியப்புடன் தொட்டு பார்த்தனர். சுரபுன்னை மரங்களின் அருகில் நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்ததையும் காண முடிந்தது.  மேலும் படகு சவாரி முடிந்ததும் சுற்றுலா அலுவலகம் முன்புள்ள குடில்களில் அமர்ந்து மாங்குரோவ் காடுகளின் இயற்கை அழகை ரசித்தபடி தாங்கள் கொண்டு வந்த தின்பண்டம் மற்றும் உணவுகளை உண்டு மகிழ்ந்தனர். மேலும் அங்குள்ள கடல்கன்னி சிலை முன்பு சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சுற்றுலாமைய வளாகத்தில் கிள்ளை பேரூராட்சி மூலம் சுற்றுலாப் பயணிகளுக்காக அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story