கொலையான இந்து பிரமுகர் மகனின் படிப்பு செலவை ஏற்ற ஹர்ஷாவின் சகோதரி


கொலையான இந்து பிரமுகர் மகனின் படிப்பு செலவை ஏற்ற ஹர்ஷாவின் சகோதரி
x
தினத்தந்தி 3 April 2022 4:28 PM GMT (Updated: 3 April 2022 4:28 PM GMT)

சிவமொக்காவில், கடந்த 2015-ம் ஆண்டு கொலையான இந்து பிரமுகர் மகனின் படிப்பு செலவை ஹர்ஷாவின் சகோதரி ஏற்றுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது

சிக்கமகளூரு:
சிவமொக்காவில், கடந்த 2015-ம் ஆண்டு கொலையான இந்து பிரமுகர் மகனின் படிப்பு செலவை ஹர்ஷாவின் சகோதரி ஏற்றுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 பஜ்ரங்தள பிரமுகர் படுகொலை

சிவமொக்கா டவுன் சீகேகட்டி பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷா(வயது 24). பஜ்ரங்தள பிரமுகரான இவர், கடந்த பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். ஹர்ஷாவின் இறுதி ஊர்வலத்தில் வன்முறை உண்டாகி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹர்ஷா கொலை வழக்கில் 10 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையே கொலையான ஹர்ஷாவின் குடும்பத்திற்கு அரசு மற்றும் தனியார் மூலம் பல லட்சம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டது. ஆனால் ஹர்ஷாவை இழந்து குடும்பத்தினர் சோகத்தில் இருந்து வருகின்றனர். இதேபோல் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி சிவமொக்காவில் விஸ்வநாத் என்ற இந்து பிரமுகர் கொலை செய்யப்பட்டார்.

 ஆனால் அப்போது அவரது குடும்பத்திற்கு உதவி கிடைக்கவில்லை. அவரது மனைவியும் 2016-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் அவர்களது ஒரே மகன் பெற்றோரை இழந்து சிக்கமகளூருவில் தாயின் சகோதரியான சித்தி வீட்டில் வளர்ந்து வருகிறான். 

 படிப்பு செலவை ஏற்கிறேன்

கூலி வேலை செய்து கஷ்டப்பட்டு சித்தி, சிறுவனை தற்போது 8-ம் வகுப்பு படித்து வைத்து வருகிறார். இதனை சிவமொக்காவில் கொலையான ஹர்ஷாவின் சகோதரி அஸ்வினிக்கு தெரியவந்தது. இதனால் மனமுடைந்த அவர், நேற்று சிக்கமகளூருவுக்கு சென்று விஸ்வநாத்தின் மகன், அவனது சித்தியை சந்தித்து பேசி ஆறுதல் கூறியுள்ளார். 

பின்னர் அவர், சிறுவனின் படிப்பு மற்றும் குடும்ப செலவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்வதாக உறுதி அளித்துவிட்டு சென்றுள்ளார். இதனை அறிந்த பொதுமக்கள், ஹர்ஷாவின் சகோதரிய அஸ்வினியை பாராட்டி வருகின்றனர்.

Next Story