கிரித் சோமையாவுக்கு போலீசார் சம்மன்- விசாரணைக்கு ஆஜராக உத்தரவு


படம்
x
படம்
தினத்தந்தி 12 April 2022 3:54 PM GMT (Updated: 12 April 2022 3:54 PM GMT)

முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஆஜராக கிரித் சோமையாவுக்கு போலீசார் சம்மன் வழங்கி உள்ளனர்.

மும்பை, 
முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஆஜராக கிரித் சோமையாவுக்கு போலீசார் சம்மன் வழங்கி உள்ளனர்.
மோசடி வழக்கு
ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை அருங்காட்சியமாக மாற்ற ரூ.57 கோடி நிதி திரட்டி மோசடியில் ஈடுபட்டதாக பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா மீது சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் அளித்த புகாரின் போில் போலீசார் கிரித்சோமையா, அவரது மகன் நீல் சோமையா மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இந்தநிலையில் கிரித் சோமையா கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க பா.ஜனதா ஆட்சி செய்யும் கோவா, குஜராத் போன்ற மாநிலங்களில் தலைமறைவாக இருக்கலாம் என சஞ்சய் ராவத்குற்றம் சாட்டி இருந்தார்.
மத்திய அரசிடம் கேட்போம்
இந்தநிலையில் மாநில உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீலிடம் கிரித் சோமையா இருப்பிடத்தை கண்டுபிடிக்க மத்திய அரசிடம் தகவல் கேட்கப்படுமா என கேட்டபோது, அவர், " உங்களின் பாதுகாப்பில் (சி.ஆர்.பி.எப். வீரர்களின் இசட் பிரிவு பாதுகாப்பு) இருந்தவர் எங்கே என மத்திய அரசிடம் கேட்போம். மற்றவர்களின் மீது குற்றச்சாட்டுகளை சொல்வது எளிது. 
உங்கள் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் போது, அதை உங்களால் எதிர்கொள்ள முடியவில்லை. இது வீரத்தின் அடையாளம் அல்ல" என்றார்.
ஆஜராக சம்மன்
மும்பை செசன்ஸ் கோர்ட்டு மோசடி வழக்கில் கிரித் சோமையாவுக்கு முன் ஜாமீன் வழங்க நேற்று  மறுத்து இருந்தது. மேலும் நீல் சோமையாவின் முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடியானது. இந்தநிலையில் மோசடி வழக்கில் நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு ஆஜராகுமாறு பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கிரித் சோமையா, அவரது மகன் நீல் சோமையாவுக்கு சம்மன் வழங்கி உள்ளனர். போலீசார் வழங்கி உள்ள சம்மனில் கிரித் சோமையாவும், நீல் சோமையாவும் காலை 11 மணிக்கு விசாரணை அதிகாரியின் முன் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 
இது தொடர்பான சம்மனை போலீசார் முல்லுண்டில் உள்ள கிரித்சோமையாவின் வீட்டில் ஒட்டி உள்ளனர்.


Next Story